மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி, அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து தங்களது தரப்பு கரிசனை கொண்டுள்ளதாக இணைத்தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகரின் வருடாந்த அறிக்கை மீதான உரையாடலிற்காக இணைத்தலைமை நாடுகளின் சார்பில் பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலனோர் சான்டெர்ஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.இலங்கையில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் மே மாதம் நடத்தப்பட்டதை வரவேற்பதுடன், 2009ம் ஆண்டு ஆயுதமோதலின் போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூருவது இம்முறை அமைதியான விதத்தில் இடம்பெற்றதை தங்களது தரப்பு கவனத்தில் கொண்டுள்ளதாக அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி, அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளுக்கு தண்டனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதை நிவர்த்தி செய்யவும், ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், சிவில் சமூகத்தினர் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செயற்படகூடிய நிலையை ஏற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய முழுமையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறை என்பன, பாதிக்கப்பட்ட மக்களின் நம்பி;க்கையை பெறுவது மிகவும் முக்கியமானதாகவும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக குறிப்பிட்ட அரசாங்கம், அதனை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை மீண்டும் வலுப்படுத்துவதன் மூலம் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்க்கப்படாத வழக்குகளை தீர்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் இணைத் தலைமை நாடுகளின் சார்பில் பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலனோர் சான்டெர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.