வவுனியா குளத்தினுள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாத்தள விடயம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அதில் நீங்கள் தலையிட்டால் உங்களுக்கு பிரச்சனை ஏற்படும் எனவும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருந்ததாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 5000 குளங்களை புனரமைக்கும் ஜனாதிபதியின் நீர்ப்பாசன செழுமை வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 100 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.
அதனடிப்படையில் ஒரு கட்டமாக இன்றையதினம் வவுனியா பொன்னாவரசங்குளம், ஈச்சங்குளத்தில் 7.6 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புக்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு இத்திட்டத்தினை வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கு.திலீபன் ஆரம்பித்து வைத்தார்.
இதன் பின்னர் வவுனியா குளத்தினுள் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சுற்றுலா மையம் தொடர்பாக வினவியபோது,
“வவுனியா குளத்தினுள் கூடாரம் அமைத்தல் போன்ற செயற்பாட்டினை கண்டிக்கிறேன். குறிப்பாக குளங்களினை அபிவிருத்தி செய்து வரும் செயற்பாடுகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் குளங்களினை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டிற்கு இடம்கொடுக்க முடியாது. ஏற்கனவே சுற்றுலாத்தளமானது அங்கு அமைப்பதற்கு நகரசபையே காரணமாகும்.
மேலும் நேற்றைய தினம் ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்திருந்தது. அவ்வழைப்பில் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், இதில் நீங்கள் தலையிட்டால் உங்களுக்கு பிரச்சனை. தானே என்று ஒரு சூட்சுமமான கருத்து வந்திருந்தது. உடனே இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக தெரிவித்து இதற்கு அனுமதி வழங்கியுள்ளீர்களா? என கேட்ட போது அவர்களினால் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அத்தோடு அப்பொய்யினை உரைத்தவரையும் பிரதமர் செயலகத்தினால் வன்மையாக கண்டித்தும் உள்ளனர்.
வருகின்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் இவ்விடயத்தை முன்னெடுத்து இதனை அகற்றுவதற்குரிய தீர்மானத்தை எடுக்கவுள்ளோம்” என்றார்.






