வவுனியாவில் 3 மன்றங்களில் ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தி தயார்!

வவுனியா மாநகர சபை உள்ளிட்ட 3 சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் என்று அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர், இந்த விடயம் தொடர்பில் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடனும், சுயேட்சை குழுக்களின் உறுப்பினர்களுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதேநேரம், மன்னார் மாவட்டத்தில் இரண்டு உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கையை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

‘தங்களின் கொள்கை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக அதிக ஆசனங்கள் கிடைத்தன’.  ‘உள்ளூராட்சி மன்றத்தேர்தல் முறைமையானது பல்வேறு பிரச்சினைகளுக்குட்பட்டதாக இருக்கிறது. எனவே எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘நாம் ஏனைய கட்சிகளுடனும் சுயேட்சை உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளோம்’.
அந்த அடிப்படையில் வவுனியாவில் சிங்கள பிரதேசசபை, வவுனியா மாநகரசபை மற்றும் தெற்கு தமிழ் பிரதேசசபை ஆகியவற்றில் ஆட்சியமைப்பதற்கு சாதகமான நிலைமைகள் காணப்படுகின்றன.
எனவே, தங்களின் கொள்கைகளுடன் இணைந்து பயணிக்க கூடியவர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.