வவுனியா மாவட்டத்தில், 24 ஆயிரம் ஏக்கர் காணிகளை மீள பொதுமக்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுனில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட விவசாய அமைப்புகளுடனான சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்திய காணி கையகப்படுத்தல் வர்த்தமானி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரச உத்தியோகத்தர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, காணி தொடர்பான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
‘மக்கள் காணிகளின் உரித்துகளை இழந்துள்ளனர். மறுபுறம், பாதுகாப்பு தரப்பும், வனவளத்திணைக்களமும் காணிகளை கையகப்படுத்தியுள்ளன’.
இது குறித்து உரிய தரப்புகளுடன் கலந்துரையாடி, அவற்றை மக்களுக்கு மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதேநேரம், வவுனியாவில் வனவளத்திணைக்களம் கையகப்படுத்திய விவசாய நிலங்களை மீள மக்களிடமே பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யப்படுவதுடன், அதற்கு குறித்த திணைக்களங்கள் ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுனில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.