யாழ்ப்பாணம்: வலிகாமம் வடக்கின் பலாலி வடக்கில் கடந்த ஆண்டு விவசாய நடவடிக்கைக்காக காணிகள் விடுவிக்கப்பட்டு 15 மாதங்கள் கடந்துள்ளநிலையில், தற்போதும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இறுக்கமான கண்காணிப்பிலே உள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காணி விடுவிப்புக்காக 15 மில்லியன் ரூபா அரச நிதி செலவு செய்யப்பட்டு அந்தக் காணிகள் துப்புரவாக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பாதுகாப்பு வேலியை அகற்ற இராணுவத்தினர் 18 மில்லியன் ரூபா தேவை எனத் தெரிவித்து காணிகளை விடுவிக்க மறுத்து வருகின்றனர். அதனால் அந்தக் காணிகள் மீண்டும் பற்றைக்காடுகளாக மாற ஆரம்பித்துள்ளன.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிவகித்தபோது கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி ஒட்டகப்புலத்தில் நடந்த நிகழ்வில் ‘உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் பலாலி வடக்கு ஜே/254, பலாலி கிழக்கு ஜே/253, பலாலி தெற்கு ஜே/252, வயாவிளான் கிழக்கு, ஜே/244.வயாவிளான் மேற்கு, ஜே/245 கிராம அலுவலர் பிரிவுகளில் 234.83 ஏக்கர் காணி விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்பட்டது.
அவை 408 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. காணிகளை விடுவிப்பதற்காக அவை 15 மில்லியன் ரூபா அரச நிதி செலவிடப்பட்டு துப்புரவாக்கப்பட்டன. ஆயினும் காணிகள் விடுவிக்கப்பட்டுத் தற்போது 15 மாதங்கள் கடந்துள்ளபோதும். அவை இன்னமும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளன. மக்கள் அந்தக் காணிகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், அங்குள்ள பாதுகாப்பு வேலி அகற்றப்பட வேண்டும். ஆயினும் அங்குள்ள பாதுகாப்பு வேலியை அகற்றிப் பின்னநகர்த்துவதற்கு 18 மில்லியன் ரூபா தேவை என்று தெரிவித்து இழுத்தடித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.