வரும் 30ஆம் திகதி யாழில் மாபெரும் போராட்டம்: காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அறிவிப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே போராட்டம் தொடர்பில் அறிவித்துள்ளனர்.

யுத்தம் நிறைவுக்கு வந்த நாட்கள் தொடக்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி போராடி வருகிறோம்.இது வரையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.

உள்ளக விசாரணைகளின் ஊடாக நீதி கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை எனவே தான் நாம் சர்வதேச விசாரணைகளை கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

அந்த வகையில் எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

எமது போராட்டத்திற்கு தமது அரசியல் நிலைப்பாடுகளை கடந்து கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.