வரி விவகாரத்தில் அமெரிக்காவுடன் சாதக இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக இலங்கை அறிவிப்பு

இலங்கை மீது அமெரிக்கா விதித்த, அதிக வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள், சாதகமான நிலையை எட்டியுள்ளதாக, வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு அதிக வரிகளை விதிக்கும் நாடுகளுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், பரஸ்பர வரியை விதிக்க, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் தீர்மானித்தது.

அதன்படி, இலங்கைக்கு 44 சதவீதம் வரை வரியை விதிக்க அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
எனினும் இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளுக்கு, 90 நாட்களுக்கு அந்த வரி விதிப்பு இடைநிறுத்தப்பட்டது.
இந்தநிலையில், இலங்கை உட்பட பல நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் வரி குறைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன.

எவ்வாறாயினும், குறித்த 90 நாட்கள் காலஅவகாசம் எதிர்வரும் 9ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவுக்கு ஒவ்வொரு நாடுகளிலும் இருந்து மேற்கொள்ளப்படும், இறக்குமதிகளுக்கான தீர்வை வரி அளவுகளை குறிப்பிட்டு அந்தந்த நாடுகளுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12 நாடுகளுக்கு இவ்வாறான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவை  இன்றைய தினம் (07) வெளிவரும் எனவும் தெரிவித்த அவர், எந்தெந்த நாடுகளுக்கு அவை அனுப்பப்பட்டுள்ளன என்பதை தெரிவிக்கவில்லை.

இந்தநிலையில், அமெரிக்காவுடன் இடம்பெற்ற வரி இணக்க பேச்சுவார்த்தை சாதமான மட்டத்தை எட்டியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.