வேட்பாளர்களின் கூட்டத்துக்கு செல்லாததால் அந்த வேட்பாளரையும், அவருடைய மகனையும் காவல்துறை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் மருதங்கேணியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
மருதங்கேணி காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும், உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான சந்திப்பொன்றை காவல்துறை ஒழுங்கமைத்துள்ளனர். இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் ஜெகதீஸ்வரன் சற்குணாதேவியும் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், அவருடைய வேட்புமனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதால், அவர் தற்போது வேட்பாளர் இல்லை. எனவே, அவர் காவல்துறையினர் கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர்த்திருந்தார்.
இதையடுத்து, அவருடைய வீட்டுக்கு துப்பாக்கிகள் சகிதம் நேற்றுப் பொலிஸார் சென்றுள்ளனர். இதன்போது, எதற்காக கலந்துரையாடலுக்கு வரவில்லை என்ற காவல்துறையினரின் கேள்விக்கு, ‘நீதிமன்றத்தால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது நான் வேட்பாளர் இல்லை. எனவே கலந்துரையாடலுக்கு வரவில்லை’ என்று சற்குணாதேவி பதில் வழங்கியுள்ளார்.
எனினும் அதை ஏற்றுக்கொள்ளாத காவல்துறை , அவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். தனது தாயாருடன் எதற்காகத் தர்க்கப்படுகின்றீர்கள்? என்று அவரின் மகன் பொலிஸாரிடம் கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்தே, துப்பாக்கி முனையில், சாரத்தைப் பிடித்து இழுத்து அந்த இளைஞனைப் காவல்துறை கைது செய்தனர். அத்துடன், மேலங்கி இல்லாமல் சாரத்துடன் அந்த இளைஞர் காவக் நிலையம் வரை இழுத்துச் சென்றனர்.
இதையடுத்து, காவல்துறையினரின் கைது செய்யப்பட்ட தனது மகனைப் பார்க்கச் சென்ற சற்குணாதேவியும் காவல் நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் இந்த அராஜகமான நடத்தைக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்.