வடக்கு மீனவர்களின் தொடரும் வாழ்வாதாரத்துக்கான போராட்டம் – விதுரன்

இலங்கை வடக்குக் கடற்பரப்பில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இத்தனை வருடங்கள் கழிந்தும் தீராத ‘கடல் – அரசியல்’ பிரச்சினையாகவே நீண்டுகொண்டிருக்கிறது.
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப் பில் தொடர்ந்து அத்துமீறி நுழைந்து, இழுவைப் படகுகள் மூலமாக தாராளமாக மீன்களை வாரி அள்ளிச் செல்கின்றனர்.
இந்த நிலைமைகள் தொடர்வதால் வடக்கில் வாழும் பாரம்பரிய மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றார்கள். அத்துடன் வடக்கு கடல்வளம் விரைந்து அழிக்கப்படும் நிலைமையும் தொடர்கிறது.
கடந்த வாரம், கூட பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடு பட்டமைக்காக மன்னார் கடற்பரப்பில் கடற் படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள னர்.
ஜுன், ஜுலையில் மீன் இனப்பெருக் கத்துக்கான ஓய்வுகால நிறைவுக்குப் பின்னர் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுகின்ற நிலைமைகள் தீவிரமடைந்து வருகின்றன.
அத்துடன், இதுபற்றி பல பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டாலும் ஒரு தீராப் பிரச்சினையாக தொடர்கதையாகின்ற நிலைமைக ளும் நீண்டு கொண்டிருக்கின்றன.
இவ்வாறான நிலையில் தான், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் இடையிலான முக்கியமான தொரு சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.
அந்த சந்திப்பின் போது, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாக நுழைந்து மீன்பிடிக்கின்றனர் என்பதையும், அதனால்  இலங்கை மீனவர்கள் கடும் பாதிப்புக்களுக்கு முகங்கொடுக்கின்றனர் என்பதையும் அமைச்சர் நேரடியாகவே குறிப் பிட்டார்.
அமைச்சர் சந்திரசேகர் குறித்த ‘உணர்வு பூர்வமான’ விடயத்தினை கையிலெடுப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, வடக்கு மீனவர்களின் அபிமானத்தை பெற்றுக்கொள்வது. இரண்டாவது, இந்தியாவுடன் அவருக்கும், அவரது கட்சிக்கும் காணப்படுகின்ற ‘ஒவ்வாமை’. எது எவ்வாறாக இருந்தாலும், அமைச்சர் சந்திரசேகர், காய்தல், உவத்திலின்றி, தமிழக மீன வர்களின் அத்து மீறல்களால் வடக்கு மீனவர்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகளை நேரடியாக சுட்டிக்காட்டியமை வரவேற்கப்பட வேண்டியது.
ஆனால், தமிழக மீனவர்களால் ஏற்படும் பாதிப்புக்களை சுட்டிக்காட்டிய அமைச்சர் சந்திரசேகர், மீண்டும் இந்தியாவிடமிருந்து வடக்கு மீனவர்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவித்திட்டங்களை கோரியமையும், சீனோர் போன்ற கட்டமைப்புக்களுக்கு உதவியளிக்க கோரியமையும், பருத்தித்துறை உள்ளிட்ட பகுதிகளில் மீனவ துறைமுகங்களை கட்டியெழுப் பும் கோரிக்கையை விடுத்தமையும் ‘சரணாகதி’ நிலைமையையே வெளிப்படுத்தி இருக்கிறது.
அமைச்சரின் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வழக்கம்போல் இருநாடுகளின் நட்புறவுகளை பேண வேண்டும், ஒரே மொழி பேசும் மீனவர்களுக்கு இடையிலான முரண் பாடுகளை சமாதானமாகத் தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி முடிவுக்கு கொண்டு வந்திருந்தார்.
இலங்கையில் கடமையாற்றும் உயர்ஸ் தானிகருடன் விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர்கள் இவ்வாறான பேச்சுவார்த்தைகளை போரின் பின்னரான கடந்த 16 ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் விளைவுகள் எதுவும் நிகழவில்லை. பேச்சுக்கள் வெறும் செய்திகளாக மட்டும் வெளிவந்து மறைந்து விடுகின்றன.
வடக்கு மீனவர்களின் விவகாரம் தொடர் பாக பாராளுமன்றத்திலும் தீவிரமான விவாதங்கள் எழுகின்றன. ஆனால் அதற்கும் உருப்படியான பதில்களை ஆட்சியில் உள்ள அரசாங்கங்கள் வழங்கியதாக பதிவுகள் இல்லை. இத்தகையதொரு நிலையில் கடந்தவாரம், மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் மீனவர் பிரச்சினை தொடர்பான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முக்கியமான கேள்வி எழுப்பி யிருக்கின்றார்.
‘இலங்கை கடற்படையிடம் போதிய ரோந்து கப்பல்கள் இருக்கின்றன, தேவையான ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. ஆனால் இந்திய மீனவர்கள் சட்டவி ரோதமாக நம்முடைய கடற்பரப்பில் மீன் பிடிக்கும்போது அதை தடுப்பதில் ஏன் தோல்வியடைகிறார்கள்?’ என்பது தான் அவரது கேள்வி.
அதுமட்டுமன்றி, வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் முழத்துக்கு முழம் முகாம்களை இலங்கைப் படைப்பிரிவுகள் நிறுவியிருக்கின்றன. கடற்படையும் அவ்வாறு தான் முகாம்களை கடற்கரையோரமெங்கும் நிறுவியிருக்கின்றது. ஆனால் கடற்படையால் இந்திய மீனவர்க ளின் அத்துமீறல்களை தடுக்க முடியவில்லை. இது அதன் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது. இலங்கை கடற்படையின் இயலுமையை இங்கு கவனத்தில் கொள்வது முக்கியமானது.
போருக்குப் பின்னர் கடற்படை தனது பலத்தை அதிகரித்த போதும், இலங்கையின் கடல் எல்லைகளை பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் பலத்தை அதிகரித்திருக்கிறதா என்பதில் கேள்வி கள் உள்ளன.
கடற்படையிடம் 6 ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் இருக்கின்றன. இவ்வாறான பெரிய கப்பல்கள் இருந்தாலும் அதிவேகத் தாக்குதல் படகுகள் முக்கியமானவை. அவையே அத்து மீறல்கள் கட்டுப்படுத்தக் கூடியவை. விரைவாக செயற்பட கூடியவையாகவுள்ளன.
தற்போதைய நிலையில் இலங்கை கடற் படையானது சிறிய வகை படகுகளையும் பெரிய வகை ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களையுமே பெருக்கிக் கொண்டிருக்கிறது. நடுத்தர வகையான அதிவேகத் தாக்குதல் படகுகளை அது பலப்படுத்தவில்லை. ஒரு காலகட்டத்தில் இலங்கை கடற் படையிடம் அதிவேக தாக்குதல் படகுகள் இருந்தன. ஆனால் இப்பொழுது இலங்கை கடற்படையின் அதிகாரபூர்வ தகவல்களின் படி 9 அதிவேகத் தாக்குதல் படகுகள் மட்டுமே உள்ளன. இந்த படகுகள் இல்லாமல் எந்தவொரு கடல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.
ஆகவே, கடற்படையைப் பொறுத்தவரை யில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுப்பது நீண்ட கால முக்கிய பொறுப்பாக இருக்க போகிறது. அப்படியான நிலையில் அதனை தடுப்பதற்கு ஏற்றதொரு பலமான கடற்படையை அது கட்டியெழுப்பி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு கடற்படை முயலவில்லை. வடக்கு கடற்பரப்பை அண்மித்த பகுதிகளை ஆக்கிரமிப்பதையே இலக்காக கொண்டிருக் கின்றது.
வடக்கு மீனவர் சங்கங்களைப் பொறுத்த வரையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் சம்பந்தமாக பலவிதமான விசனங்களை கொண்டிருக்கின்றன. அதில் குறிப்பாக, இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் விலகி நடக்கும் போக்கும், சர்வதேச அழுத்தங்களும் காரணமாக கடற்படையினர் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்பதும் முக்கியமானது.
கடற்படையின் நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக குறைந்துவிட்டன. ஒருபக்கம் வடக்குப் பகுதிகளில் போதிய ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும், மறுபக்கம் கடற்படையினர் சில நேரங்களில் கைது செய்தாலும், கப்பல்கள் விரைவில் விடுவிக்கப்படுகின்றன என்பதும் தங்களின் நம்பிக்கையை முற்றிலும் குலைப்பதாகவும் குறிப்பிடுகின்றன.
மேலும் கடற்படையினர் தொடர்ந்தும் சட்டவிரோத மீன்பிடிப்பை தடுப்பதில் கையறு நிலையில் இருப்பதற்குக் காரணம் அரசியல் அழுத்தங்கள் தான் என்றும். வடபகுதி கடல்வளங்கள் அழிந்து செல்லும் போதிலும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை பெரும் கவலைக்குரியதாக மாறியுள்ளது என்றும் மீனவ சங்கங்கள் கூறுகின்றன.
இவ்வாறான நிலையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் பற்றி கரிசனைகளை வெளிப்படுத்துகின்றபோது, தமிழகத்திலும், இந்தியாவிலும் குறித்த விடயத்துக்கு தீர்வளிப்பது பற்றி ஆராய்வதற்கு பதிலாக கச்சதீவு விவகாரத்தை கையிலெடுக்கும் போக்கு தீவிரமடைந்து காணப்படுகின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கச்சதீவு விடயம் ஒரு ‘அரசியல் கருவியாக’ மாறியுள்ளது. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் இருந்து விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வரையில் அனைத்து கட்சிகளும் கச்சதீவின் உரிமையை மீளப் பெறவேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சட்டவிரோத மீன்பிடிப்பை தவிர்ப்பதற்கான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு திராணி இருப்பதாக காண முடியவில்லை.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கச்சதீவு விடயத்தில் இந்திய மத்திய அரசை குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடிகளை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எடுக்கவில்லை. ஏனென்றால், இழுவைப்படகு உள் ளிட்ட சட்டவிரோத மீன்பிடி முறைகளின் முதலீட்டாளர்களாக இருப்பவர்கள் இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரு வர்த்தகர்களும், அரசியல்வாதிகளும் தான்;. அப்படியிருக்கையில் அவர்களால் எவ்வாறு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்?
இவ்வாறான நிலையில், தமிழக மீனவர்களும் தங்களது வாழ்வாதாரத்துக்காக போராட்டங்களை நடத்துகின்றார்கள். சரியான கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள். ஆனால் இழுவைமடி முறையிலான மீன்பிடியை கைவிடுவதற்கு தயாராக இல்லை. எது எவ்வாறாக இருந்தாலும் இரு நாடுகளின் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க இரண்டு நாடுகளும் பயனுள்ள தீர்வுகளை உடனடியாக எடுக்க வேண்டும். முதலாவதாக, இரு நாடுகளும் ஒருங்கிணைந்த கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. இரண்டாவதாக, இழுவைபடகு மீன்பிடி முறைகளை முற்றிலும் தடை செய்யும் சட்ட நடவடிக்கைகளை இந்தியா விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், இலங்கை கடற்படையினரின் செயற்றிறனை அதிகரித்து, சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கானசுதந்திரத்தை வழங்கு வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும்.  இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடிப்பை அரசியல் நட்பு காரணமாக விடுவிப்பதை நிறுத்தி, கடல்வளங்களை பாதுகாக்க நம்பிக்கையுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இல்லையெனில், வடக்கு, தமிழக மீனவர்கள் இரு நாட்டு அரசியல் நாடகங்களுக்குள் சிக்கி நரபலியாகும் நிலைமையும் வடக்கு கடல்வளம் அழிவின் விளிம்புக்குச் செல்லும் நிலைமையும் துயர நிலைமை தொடரும் என்பது தான் கடைசி உண்மை.