வடக்கு – கிழக்கு மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மாத்திரமே சாதிக்க முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். மூதூர் – பள்ளிக்குடியிருப்பில் நேற்று (28) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சிக்கான பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘ஆரம்பத்தில் ஆயுதமேந்தி போராடிய நாங்கள் வேறு வழியில்லாமல் ஜனநாயக ரீதியில் ஒரே இலங்கைக்குள் எமது உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்’. ‘வடக்கு – கிழக்கை பொருத்தமட்டில் எமது கட்சியை தவிர்த்து ஏனைய கட்சிகளுக்கும் எமது மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்’.
‘தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என்று சிந்திக்கின்ற கட்சி எமது கட்சி மாத்திரமே’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ‘தமிழ் அரசாங்கம் இருந்தால் மாத்திரமே தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும்’. ‘தமிழர் தலைநகரில் சிங்கள பேரினவாத கட்சி வென்று இருக்கிறது என்றால் அது எங்களுக்கு அபாயகரமானதாகும்’.’திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களுடைய எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது.
‘ஆனால் சிங்கள மக்கள் வாழ்கின்ற மாவட்டத்தில் அவர்களுடைய எண்ணிக்கை 20 வீதத்தால் மாத்திரமே அதிகரித்துள்ளது’ என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
‘கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் தன்னிச்சையாக செயல்படுவோமாக இருந்தால் எதையுமே சாதிக்க முடியாது’.’இரண்டு மாகாணங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.