வடக்கு கிழக்கில் இராணுவத்தின் அதிகபடியான பிரசன்னம்: இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் முத்தையன்கட்டு இளைஞன் மரணம் தொடர்பில் நீதிக்கான செயல்முறை தலையீடின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யுமாறும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளது.

இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞன் மரணித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடிதம் ஒன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளனர்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் சனிக்கிழமை (09) காலை எதிரிமன்சிங்கம் கபில்ராஜ் என்பவரின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் உங்கள் கவனத்துக்கு அறிவுறுத்துகிறோம்.

2025.08.07 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தின் 63ஆவது பிரிவு முகாமுக்கு 05 ஆண்கள் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். இவர்கள் இராணுவத்தால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.