வடக்கு கிழக்கில் இன்றும் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இன்றைய தினமும் (14) வடக்கு கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதன்படி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை – கம்பர்மலை சந்தியிலும் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது.  அதேநேரம் கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் இன்று முள்ளவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று இரத்ததான முகாம் இடம்பெற்றது.’குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காக ஒரு துளி குருதி’ என்ற தொனிப்பொருளில் இந்த இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் ஊர்தி பவணி ஒன்று இன்று ஆரம்பமாகியுள்ளது.
தமிழ் இனப்படுகொலையை சித்தரிக்கும் இந்த ஊர்தி வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கும் சென்று எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலை அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.