முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. அதற்கமைய, இன்றைய தினம் (13) கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இந்தநிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூக பிரதிநிதி ஒருவர், தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட துன்பங்கள் குறித்து இளம் சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அத்துடன் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அவலமும் இதனுடாக எடுத்துக்காட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்ட நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். அதேநேரம், யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரினது உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்வாறு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. அத்துடன், மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் மன்னார் பள்ளிமுனை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி கஞ்சி பரிமாறப்பட்டது.
முல்லைதீவு – முள்ளியவளை பகுதியிலும் இன்றைய தினம் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இதேவேளை, மட்டக்களப்பு காந்திபூங்காவிலும் களுவாஞ்சிக்குடி பொது சந்தையிலும் இன்றைய தினம முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. இதன்போது, ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை சொல்வோம்’ என்ற வாசகம் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இதனையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி அமலநாயகி, தமிழர் வரலாற்றினை இளம் சமூகத்தினர் மறந்தவர்களாகவும் அறியாதவர்களாகவும் இருக்கின்றார்கள் என்று தெரிவித்தார். அதனை நினைவூட்டும் வகையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழர்களின் பிரச்சினைக்கு இதுவரையில் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என்றும் சர்வதேசம் இனியும் பராமுகமாக இருக்காது நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி அமலநாயகி வலியுறுத்தியுள்ளார்.