வடக்கில் 5940 ஏக்கர் காணியை கையகப்படுத்த அரசாங்கம் முயல்வதாக சுமந்திரன் சாடல்

வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று கூறுகின்ற அரசாங்கம் வட மாகாணத்தில் 5,000 ஏக்கருக்கும் அதிகளவான காணியை கையகப்படுத்துவதற்கு முயற்சிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (01) இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த செயற்பாட்டை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று அறைகூவல் விடுப்பதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் 5940 ஏக்கர் காணி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இந்த செயற்பாட்டை ஜனாதிபதி நிறுத்தாவிட்டால் மீண்டும் வடக்குக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அவருக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அதேபோன்று தமிழர்களின் மொழி உரிமை குறித்து கருத்துரைக்கின்ற அரசாங்கம் அதனை நசுக்கும் வகையிலேயே செயற்படுகிறது. ஆணையிறவு உப்பின் பெயர் ‘ரஜே லூணு’ என்ற பெயரில் விடுவிக்கப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘எங்களை ஏமாளிகள் என கருத வேண்டாம். ஏமாற்றுவதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை. அதற்கு எதிரான நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்போம்’ என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து கேள்வி எழுப்பினால் உப்பின் சுவை குறித்தே கவனம் செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் கூறுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.