வடகிழக்கில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆட்சி மலர வேண்டும் என்கிறது ரெலோ

வடகிழக்கில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆட்சி மலரவேண்டும் என்பதில் ரெலோ உறுதியாகவுள்ளதென அதன் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு எங்கும் பரந்துபட்ட அளவில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆட்சி மலரவேண்டும். உள்ளூராட்சி சபைகளை பலப்படுத்துவது தொடர்பாக நாம் கலந்துரையாடியுள்ளோம். அந்த வகையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியூடாக தமிழ்த் தேசிய கட்சிகளோடு இணைந்து சபைகளை பலப்படுத்துவதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அடிப்படையில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களோடு, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் தலைவர்கள் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பதாக முடிவு எட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியாகவே வவுனியா மாநகரசபை அமைய வேண்டும் என்பது எமது விருப்பம். எனவே அதன் அங்கத்துவ கட்சிகளின் பிரதிநிதிகளோடு எமக்கு கிடைத்த விகிதாசார ஆசனங்களை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது என்றும் ரெலொவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழர் நிலத்தை தமிழரே ஆட்சி செய்ய வேண்டும் என்ற தீர்ப்பையே தமிழ் மக்கள் உள்ளூர் அதிகார சபை தேர்தலின் மூலம் வழங்கியுள்ளனர் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் ஆட்சியை அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து நிர்வகிக்க வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மக்கள் வழங்கிய தீர்ப்பின்படி ஆட்சி அதிகாரத்தை தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக ஓரணியில் இணைந்து செயற்படுத்துவது அவசியம்.

இதேநேரம் தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களை எடுத்துக் கொண்டாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை அவர்களுக்கு இருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தமிழ் மக்களின் நலன்கருதி ஏனைய தரப்பினருக்கும் விட்டுக்கொடுப்புகளுடன் செயற்பட தமிழ் தரப்புகள் தயாராக வேண்டும்.

இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.அதேநேரம் தற்போது பெரிய, சிறிய என்ற நிலையில் எந்தவொரு கட்சியும் இல்லை.அனைத்தும் சமமான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.