ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என்றும் அதற்கு முன்னர் அவருடன் இணைந்திருப்பவர்கள் தொடர்பில் சரிபார்க்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும்
முன்னெடுக்கப்பட வேண்டும் என தாம் நம்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் பொது வெளியில் பாராட்டி பேசியிருந்தாலும், தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தை ரணில் விக்ரமசிங்க மாத்திரம் முன்னெடுக்கவில்லை, மத்திய வங்கி, இராஜாங்க அமைச்சு மற்றும் பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனையுடனே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது” என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்தாா்.
ரணில் விக்ரமசிங்கவுடன் மஹிந்த ராஜபக்ஷ இணைந்து செயற்பட்டாலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தான் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அது தொடர்பில் எவ்வித கருத்தும் வெளியிட முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைப்பதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியபோதும், ராஜித சேனாரத்னவும் சரத் பொன்சேகாவும் மட்டுமே அரசாங்கத்துடன் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும் தற்போது இவர்கள் இருவரை மாத்திரம் இணைத்துக்கொள்வதால் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாது என்பதால் ராஜித சேனாரத்னவை அரசாங்கத்துடன் இணைப்பதற்கு தயங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைவதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டாலும் அவ்வாறு எவ்வித சம்பவங்களும் நிகழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.