ரணிலை ஆதரிக்க மஹிந்த, மைத்திரி தயாா்? புதிய கூட்டணி குறித்து கொழும்பில் பேச்சு

ranil mahinda maithri ரணிலை ஆதரிக்க மஹிந்த, மைத்திரி தயாா்? புதிய கூட்டணி குறித்து கொழும்பில் பேச்சுரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன இணைந்து
புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்கான முன்னோட்ட கூட்டமொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய கூட்டணிக்கான ஆரம்பகட்ட பேச்சுகள் நடைபெற்றுள்ளதுடன், அடுத்துவரும் நாள்களில் கட்சிகளைத் தனித்தனியே சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. பஸில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் மொட்டுக் கட்சியுடன் ஜனாதிபதி சந்திப்பை நடத்துவார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள ஜனாதிபதி, அதற்காக ஆதரவளிக்குமாறு தோழமைக் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் (குதிரை சின்னம்), செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (சேவல் சின்னம்), டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. (வீணை சின்னம்) என்பனவும் கூட்டணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.