யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த மக்களுக்காக இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய, பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது.
இதன்படி, முற்பகல் 10.15 அளவில் முள்ளிவாய்க்கால் மண்ணிலே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினால் நினைவு பேருரை ஆற்றப்பட்டு, 10.29க்கு மணி ஒலி எழுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றுடன், யுத்தத்தில் தன்னுடைய மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் இழந்த தந்தையொருவர் பொதுச்சுடரினை ஏற்றி வைக்க ஏனைய உறவுகளும் தங்களுடைய உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக மலர் அஞ்சலி செலுத்தினர்.
பிரதான நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னதாக இன்று காலை 6.30 முதல் முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரையில், இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிதிர்க்கடன் செலுத்தப்பட்டது.
அத்துடன், முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்காக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டோர் இன்று காலை நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.