யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு வழங்கப்படும் : ஜனாதிபதி உறுதி

யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் அங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டில் பொதுவான பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் வடக்கு மக்களுக்கு பிரத்தியேகமான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் மற்றும் பாதுகாப்பு காரணிகளை குறிப்பிட்டு மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே விடுவிக்க கூடிய அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவரவர் காணிகள் அவரவருக்கு வழங்கப்படும். விசேட வேலைத்திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்தில் காணப்படும் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம். இடைநிறுத்தத்தப்பட்ட அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்போம் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும். தேசிய மக்கள் சக்தி அனைத்து இன மக்களும் கௌரவமாகவும் அவரவரின் உரிமைகளுடனும் வாழும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
மொழி, கலாச்சாரம் என்ற அடிப்படையில் எவரையும் வேறுப்படுத்த போவதில்லை. இந்த நாட்டில் தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் சமவுரிமையுடன் வாழ்வதற்கு உரிமையுண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டுகால யுத்தத்தால் இந்த மாகாணத்தின் அபிவிருத்தி பின்னடைந்தது.
யுத்தத்தால் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தோற்றம் பெற்ற பிரச்சினைகள் இன்றும் உள்ளன.யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.