நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சின் அண்மைய விசாரணையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையானது உள்ளூர் மக்களிடமிருந்து சட்டவிரோதமாக சுவீகரிக்கப்பட்ட காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த மாளிகை கட்டப்பட்ட நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையைக் கோரி எட்டு நபர்கள் முன்வந்துள்ளனர்.
இது சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு அங்கு முதலீடுகளை செய்வதில் சிக்கல்களை உருவாக்குகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க, எந்தவொரு முதலீட்டாளருக்கும் சொத்தை வழங்குவதற்கு முன்னர் அனைத்து உரிமைப் பிரச்சினைகளும் முழுமையாக தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் அங்குள்ள சட்ட தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஜனாதிபதி மாளிகையை பல்வேறு முதலீட்டு நோக்கங்களுக்காக பெறுவதற்கு கனடாவை சேர்ந்த முதலீட்டாளர் உட்பட பல தரப்பினர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தனர். 2010 மற்றும் 2015 ஆண்டுகளுக்கு இடையில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த ஜனாதிபதி மாளிகை காங்கேசன்துறையில் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதில் சுமார் 15 ஏக்கரில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுமானங்களுக்காக சுமார் 3.5 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.