யாழில்  34 வருடங்களுக்கு பின் திறக்கப்பட்ட வீதி: தேர்தல் உத்தியா? – மூத்த பத்திரிகையாளர் பாரதி

யாழ்ப்பாணம் பலாலி வீதி – வசவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான  வீதி 34 வருடங்களுக்கு பின்னர்  நவம்பர் முதலாம் திகதி முதல் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990ம் ஆண்டிலிருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில்   இருந்த குறித்த பகுதி மக்கள் பாவ னைக்கு எனக்கூறி திறக்கப்பட்டுள்ளது.

அதேவேளை திறக்கப்பட்ட வீதியின் இரு மருங்கிலும் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் வீதியோரமாக உள்ள ஆலயங்களில் வழிபாடு செய்யவும் அனுமதிகள் மறுக்கப்பட்டிருந்தன. தற்போதும் அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே வைக்கப்பட்டுள் ளது.

எனவே வீதியை மக்கள் பாவனைக்காக முழுமையாக திறந்து,  அப்பகுதியில் மக்கள் மீள் குடியேற அனு மதிக்க வேண்டும் எனவும், அப்பகுதியில் உள்ள ஆலயங்களை புனரமைத்து வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும்  மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் பாரதி அவர்கள் குறித்த வீதி திறக்கப்பட்டமை குறித்து ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழில் திறக்கப்பட்ட பாதை தொடர்பாக உங்களது கருத்து என்ன? 

நீண்ட காலமாக பலாலிப் பகுதியில் இருக்கின்ற ஒரு பாதை சுமார்  1250 மீற்றர் திறக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் நினைத்திருந்தால் அநுர குமார திசாநாயக்க ஆட்சி பொறுப்பேற்றவுடன் அதனை திறக்க உத்தரவிட்டிருக்கலாம். ஏனெனில் கொழும்பில் இருக்கக்கூடிய சில முக்கியமான வீதிகள் திறக்கப்பட்டன. அந்த நேரத்திலேயே  யாழ்ப்பானத்தில் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள வீதிகள் திறக்கப்பட வேண்டும் என்ற   கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது அதனை அவர் செய்வதற்கு எந்த நடவடிக்கைகளையும் செய்ய வில்லை. ஆனால் இப்போது நவம்பர் மாதம் முதலாம் திகதி  இந்த வீதியைத் திறந்தமைக்கு ஒரு காரணம் இருக்கின்றது.

1 – தேர்தல் நெருங்கிக்கொண்டு இருப்பது ஒரு காரணம். யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே “அநுர அலை” என்று இருந்த ஆதரவு தற்போது குறைந்து கொண்டு வரும் சூழ் நிலை யில், தமிழர்களுடைய ஆதர

வினை மீண்டும் பெறுவதற் காக ஏதோ ஒன்றை செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

2 – ஒக்டோபர் 30ம் திகதி தபால் மூலமான வாக்களி ப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணத்தைப்பொருத்த வரையில் படையினர்தான் பெருமளவுக்கு தபால் மூலம் வாக்களிப்பினை செலுத்துவார்கள். எனவே அந்த வாக்களிப்பு நடைபெறுவதற்கு முன்னர் இந்த பாதை திறக்கப்பட்டிருந்தால் சில நேரங்களில் படையினர் அதிருப்தி அடைவார்கள். அது தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு குறைவடையலாம் என்றவொரு அச்சம் அவர்களிடம் இருந்திருக்கலாம். அதன் காரணமாக அந்த வாக்களிப்பு முடிந்த பின்னர் குறித்த வீதியை அரசாங்கம் திறக்க முடிவு செய்துள்ளது. பொதுவாக பாதை திறப்பு, காணி விடுவிப்பு போன்றவை பெரிய நிகழ்வாகக் காட்டிக்கொள்ளப்படுவது வழமை. ஆனால் அவர்கள் அவ்வாறு இந்த பாதை திறப்பின் போது செய்யவில்லை. அதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கின்றது.

அதாவது தேர்தல் நேரத்தில் தென்பகுதியில் இருக்கக்கூடிய சிங்கள மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் ஆரவாரம் இல்லாமல் இந்த பாதையை திறக்கக்கூடிய நடவடிக்கையை  அவர்கள் செய்திருந்தார்கள். இருந்த போதிலும் வட பகுதியைப் பொருத்தவரையில் இவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெற்றால் அது உடனடியாகவே ஊடகங்கள் வாயிலாக மக்களை அந்த செய்திகள் சென்றடைந்து விடும். எனவே மக்கள் மத்தியில் தமக்கான ஆதரவு அதிகரிக்குமென்றுதான்  அநுர அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது.

இந்த சூழலில் அரசாங்கம் எதிர்பார்த்தது போலவே குறித்த பகுதிக்கு பெருமளவு மக்கள் சென்றிருந்தனர். அத்தோடு அந்த பகுதியில் பொங்கல் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

மேலும் பாதை திறக்கப்பட்டுள்ளதே தவிர பாதைக்கு இரு பக்கமும் உள்ள காணிகளுக்குள் செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்த காணிகளைச் சுற்றி அடைக்கப்பட்டுள்ள முற்கம்பி வேலிகள் இதுவரையில் நீக்கப்படவில்லை. ஆகவே இது அநுர அரசின் கண் துடைப்பு நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

தேர்தலுக்கு மக்களை கவருவதற்காக  சின்னதொரு நிகழ்வாக இந்த வீதி திறப்பு இடம்பெற்றுள்ளதே தவிர பெரும்பாலான காணிகளோ அல்லது பெரும்பாலான வீதிகளோ திறக்கப்படவில்லை என்பதுதான் வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் உண்மை நிலை. அரசாங்கத்தைப் பொருத்தளவில் அதனை உடனடியாக திறக்கப்போவதில்லை என்பதான கருத்தையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

பாதுகாப்புத்தொடர்பான ஆலோசனைகளின் பின்னரே காணிகள், வீதிகள் விடுவிப்பது தொடர்பில் தீர்மானிக்கப் படும் என்ற கருத்தையும் தெரியப்படுத்தியுள்ளது அரசாங்கம். இதுதான் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு.

திறந்து விடப்பட்ட இந்தப் பகுதிகளில் மக்கள் திரும்பி இயல்பு வாழ்க்கை வாழ முடியுமா? 

அப்படி கூற முடியாது. ஏனென்றால் சிறிய பாதைதான் திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக மக்களின் இயல்பு வாழ்க்கை ஒரு வழமையான அல்லது சீரான நிலைக்கு வரும் என்று கூற முடியாது. சுமார் 34 ஆண்டுகளாக மக்களின் காணிகள் அரசாங்கத்தால் விடுவிக்கப்படவில்லை. அதே நேரம் 34 ஆண்டுகளாக குறித்த பகுதியில் இருந்து வெளியேறிய மக்கள் இன்னும் தமது காணிகளுக்குச் செல்ல முடியாத நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.   அந்த பகுதி மக்களுடைய அடுத்த சந்ததியைச் சேர்ந்தவர்கள்தான், இந்த குறுகிய பாதை திறப்பு  செய்தி கேட்டு ஓடி வந்தவர்களில் பெரும்பாலனவர்கள்.  ஆனாலும் அவர்களால் தமது காணிகளுக்கு செல்லவோ, தமது வீடுகளை பார்வையிடவோ அனுமதிக் கப்படவில்லை. மேலும் காணிகளைச் சுற்றி முற்கம்பி வேலிகள் அடைக் கப்பட்டிருந்தது. அத்துடன் இராணுவம் தொடர்ந்தும் அந்த பகுதிகளில் முகாம் அமைத்து நிலைகொண்டுள்ளனர். இதன் காரணமாக தங்களுடைய பெற்றோர், உறவினர்கள் வாழ்ந்த இடங்களை தற்போதைய சந்ததியினரால் பார்க்க முடியவில்லை. அதே நேரத்தில் அந்தப்பகுதிகளில் வாழ்ந்து வெளியேறியவர்களும் தம்முடைய வாழ்விடங்களை பார்க்க முடியவில்லை. அத்தோடு அவர்களால் முற்கம்பி வேலிகளுக்குள் இடிந்து அழிவடைந்திருந்த வீடுகளைத்தான் காண முடிந்தது.

அந்தப்பகுதியில் குறித்த பகுதிகள் மீள விடுவிக்கப்பட்டு, அந்த மக்கள் தமது காணிகளுக்குள் வீடுகளை அமைத்து,அந்த பகுதிகளில் அனைத்து அத்தியாவசிய வசதிகளும் உடனடி யாகப் பெறக்கூடிய நிலைமை இல்லை. எனவே ஒரு வழமை நிலைமையை அங்கு கொண்டு வருவதென்றால் ஒரு குறிப்பிட்ட காலம் செல்லும்.

அதே வேளை அந்த பகுதில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் நீண்ட காலமாக முகாம்க ளில்தான் இருந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் முகாம் கள் அமைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தங்கள் பிள்ளைகளின் கல்வி,வேலை போன்ற தேவைகளுக்காக வாடகைக்கு வீடுகளை எடுத்து வசித்து வந்தனர். அத்தோடு அவர்கள் தமக்கு உரிமையான காணிகளில் இருந்து பெறக்கூடிய வருமானத்தையும் இழந்துள்ளனர். எனவே பொருளாதார ரீதியாக அவர்கள் கடந்த 34 வருடமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வலிகாமம் வடக்கைப் பொருத்தவரையில் அது விவசாயத்துக்கு மிகவும் பெயர் போன இடம். அந்த பகுதியில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்து வந்தனர். அந்த வாழ்வாதாரத்தை இழந்து அதே நேரத்தில் அதிகளவில் செலவு செய்து வீடுகளை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தனர். இந்த சூழலில் அந்த மக்கள் தமது சொந்தப்பகுதிகளில் குடியேறி இயல்பாக வாழ்வதென்பது உடனடியாக சாத்தி யம் இருக்காது. அதற்கான ஒரு பாரிய திட்ட மொன்றை அரசாங்கம் வகுத்துக்கொடுத்தால் தவிர தாங்களாகவே குடியேறி தாங்களாகவே வாழ்க்கையைத்தொடர்வதென்பது சாத்தியப் படாது.

தீர்த்து வைக்க வேண்டிய பெரு மளவான விடயங்கள் இருக்கும் போது இந்த வீதித் திறப்பு மட்டும் மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்குமா?

நிச்சயமாக நம்பிக்கையைக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. அரசாங்கத்தரப்பில்,இந்த பாதை திறப்போடு அதிகளவிலான மக்கள் குறித்த பகுதிக்கு சென்றிருந்தார்கள். அந்த நேரத்திலே தேசிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற சில வேட்பாளர்களும் அங்கு சென்றிருந்தனர். அவர்களும் மக்களுக்கு நம்பிக்கையைக்கொடுக்கும் வகையில்தான்  கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

மேலும் தங்களுக்கு ஒரு குறிப்பிட்டளவு ஆசனங்கள் கிடைத்தால்தான் மேலதிகமாக இது போன்ற விடயங்களை செய்ய முடியும் என தெரிவித்திருந்தனர். ஆனால் இது மட்டும் மக்களுக்கு நம்பிக்கையைக்கொடுக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது.

இந்தப் பாதை திறப்பு விவகாரம் ஒரு தேர்தல் உத்தியா?

நிச்சயமாக இது ஒரு தேர்தல் உத்திதான். ஜனாதிபதித்தேர்தல் நடைபெற்ற போது ‘அநுர அலை’ தென்பகுதியில் பலமாக இருந்தது. அதே போன்று தமிழ்  மக்களும்கூட அந்த அலையில் ஓரளவுக்கு கவரப்பட்டிருந்தனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ‘அநுர அலை’ கொஞ்சம் தணியத் தொடங்கியுள்ளது.

குறிப்பாகக் கூறுவதென்றால் பயங்கரவா தத்தடைசட்டம் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து,அதிகாரப்பரவலாக்கள், 13ம் திருத்தம் போன்ற விடயங்களில் அநுர தலைமையில்  தெரி விக்கப்பட்ட கருத்துக்கள் போன்றவை மக்கள் மத்தியில் அவர்கள் மீதான நம்பிக்கையை பெரு மளவுக்கு பாதித்துள்ளது.

அந்த நிலமையில் ஏதோ ஒரு வகையில் யாழ்ப்பாண மக்களின் ஆதரவைப்பெற வேண்டும், யாழில் ஒரு ஆசனத்தையாவது பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுகின்ற ஒரு நிலமையில்தான் இந்த பாதை திறக்கப்பட்டுள்ளது. அதே நேரம்  அநுரவும் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் தனது தீவிர பிரசாரத்தை  மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் மக்களுடைய ஆதர வைப்பெருவதற்கு ஒரு உபாயமாகத்தான் இந்த பாதை திறக்கப்பட்டுள்ளது.