யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கான எஞ்சிய கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குமாறு கோரி, வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பயனாளிகள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
2019 ஆம் ஆண்டு, தற்போதைய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் இந்த வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆனால், இன்று வரை அதற்கான கொடுப்பனவுகள் முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால் அரைவாசி கட்டப்பட்ட வீடுகளில், கூரைகள் இன்றி மழைக்காலங்களில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் தாம் வாழ்ந்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
பாரபட்சமற்ற அரசாங்கம் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் கடந்த ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட தங்களது திட்டங்களுக்கான பணத்தை வழங்காமல், புதிய வீட்டுத்திட்டங்களுக்கு நிதியை ஒதுக்குவது தங்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது எனவும் தமது நிலைமை தெரிந்திருந்தும் ஆளுநர் மௌனமாக இருப்பது ஏன்? எனவும் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.
அதேநேரம், யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வீதிகளில் இறங்கி மக்களைச் சந்திக்கிறார். ஆனால், வீடின்றி அரைகுறை வீடுகளில் தவித்துக் கொண்டிருக்கும் தங்களைப் போன்றவர்களைச் சந்திக்க அவருக்கு நேரமில்லை எனவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தங்களது பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனிடையே தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை ஆளுநர் அலுவலகத்தில் கையளித்த பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.



