மொட்டு அணியின் ஆதரவைப் பெறுவதற்கு நால்வா் போட்டி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நால்வருக்கிடையே கடும் போட்டி எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தங்களது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன.

ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் தொடர்ச்சியாக பல்வேறு கதைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ள ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள நிலையில், மேலும் மூவர் இந்தப்போட்டியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச ஆகியோரே இவ்வாறு ஜனாதிபதியுடன் போட்டியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் தம்மிக்க பெரேராவும், நாமல் ராஜபக்சவும் ஏற்கனவே தேரதல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தாமே முன்னிறுத்தப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்துள்ளார். இதனால் ரணில் விக்ரமசிங்கவைப் போன்று ஏனைய மூவரும் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் உள்ளனர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவுக்கு தொடர்ந்தும் அறிவித்தமையினால், ஜூன் 15 ஆம் திகதிக்கு முன்னர் அவர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும், அதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனவும் பசில் அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தார்.

ஆனால் ஜூன் 15ம் திகதிக்குள் அதனை நிறைவேற்ற முடியாத காரணத்தினால் ஜனாதிபதி மேலும் கால அவகாசம் கேட்டதையடுத்து பொதுஜன பெரமுன, ஜூலை 15 வரை அவருக்கு கால அவகாசம் வழங்கியது. அப்போதும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால் அம்மாத இறுதிக்குள் தமது நிலைப்பாட்டை அறிவிக்குமாறு ஜனாதிபதிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.