மே 29ஆம் திகதி பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று சுமந்திரன் எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படாவிட்டால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர், கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானியை மீளப்பெறுமாறு கோரி ஏற்கனவே ஜனாதிபதிக்கு தாம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்படாவிட்டால் 29ஆம் திகதி பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள சுமார் 6,000 ஏக்கர் காணியை கையகப்படுத்துவதற்கு அரசு முயல்கிறது.
உள்நாட்டு யுத்தம் மற்றும் சுனாமி போன்றவற்றால் பலர் தங்களில் இருப்பிடங்களில் இருந்து இடம்பெயர்ந்ததுடன் தங்களின் உடமைகளையும் இழந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பல இலங்கையர்கள் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ளமையினால் அவர்களுக்கும் தங்களின் காணி உரித்தை உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

இந்தநிலையில் பழைய சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கம் காணிகளை கையகப்படுத்த விளைகிறது.
எனவே, இதற்காக விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்படாத பட்சத்தில் 29ஆம் திகதி பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கு வடக்கு கிழக்கில் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்