‘முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட மெய்நிகர் பாதுகாப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது’ என்று சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார்.
குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என உத்தரவிடக்கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மன்றாடியார் நாயகம் விராஜ் தயாரத்ன இதனை மன்றுக்கு அறிவித்தார். இந்த மனுக்கள் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட தரப்புக்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக எதிர்காலத்தில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மன்றாடியார் நாயகம் மன்றுரைத்தார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மெய்நிகர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் அந்த முயற்சிகள் தடைப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில், இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட விதத்தை எதிர்த்தே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர். எனினும், ‘சம்பந்தப்பட்ட சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதால், அதன் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு அவற்றைக் கையாள்வது பொருத்தமானதாக இருக்கும்’ என்று மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியது. அதன்படி, குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.



