மூன்று முனைப் போட்டியில் முன்னணியில் இருப்பது யார்?: பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான நிய மனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது. அதிரடியான கட்சித் தாவல்களும், வாக்குறுதிகளும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் தென்னிலங்கை கள நிலைமைகள் எவ்வாறிருக்கின்றது என்பது குறித்து ஆராய்வதற்காக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்த லிங்கம் அவர்கள் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலை இலக்கின் வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம்.

ஜனாதிபதித் தோ்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. தோ்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன. தற்போதைய கள நிலைமைகள், தோ்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புக்கள் எவ்வாறுள்ளன?

ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த பின்னா் பெரும்பாலும் இருமுனைப் போட்டி யாகத்தான் இந்த ஜனாதிபதித் தோ்தல்கள் இருந்து வந்திருக்கின்றது. சிலவேளைகளில் வெற்றியாளா் யாா் என்பதை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய நிலையும் இருந்தது. சிலவேளைகளில் ஒரு அலை வீசுவதையும் காணலாம். அந்தக் காலங்களில் சிங்கள – பௌத்த மக்கள்தான் ஜனாதிபதியைத் தீா்மானிப்பவா்களாக இருந்தாா்கள்.ஆனால், இப்போது, வரலாற்றில் முதல் தடவையாக, ஒரு மும்முனைப்போட்டி உருவாகியிருக்கின்றது. வெற்றியாளா் யாா் என்பதை சொல்ல முடியாத நிலைதான் இன்றுவரை தொடா்கின்றது. ஆனால், தோ்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்து தோ்தல் நெருங்கும் போது, பிரதான வேட்பாளா்கள் மக்களை எவ்வாறு எதிா்கொள்கின்றாா்கள் என்பதைப் பொறுத்து இது இரு முனைப்போட்டியாக இருக்குமா அல்லது மும்முனைப்போட்டியாக இருக்குமா என்பதைச் சொல்லக்கூடியதாக இருக்கும். ஆனால் இப்போது தென்பகுதியில் சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் இருப்பவா் களுடனும் பேசும்போது ஒவ்வொருவரும் ஒவ் வொருவிதமான கருத்தைச் சொல்கின்றாா்கள். வெற்றியாளா் யாா் என்பது தெளிவாகத் தெரிய வில்லை. அதேவேளையில் தென்பகுதியில் இப் போது ஒரு அலை வீசாத நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம்கள், மலையக மக்களுடைய வாக்குகள் முக்கியமான பங்கை வகிக்கப்போகின்றன.

இந்த ஜனாதிபதித் தோ்தல் உண்மையில் ஒரு மூன்று முனைப் போட்டியா? அல்லது நாமல் களமிறங்கியிருப்பதால் நான்கு முனைப் போட்டியாகியுள்ளது என்று சொல்லாமா? நாமல் ராஜபக்ஷ இந்த கள நிலையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றாா்? 

அவா் பத்து இலட்சத்துக்கும் குறை வான வாக்குகளையே பெறுவாா் என்று பலரும் கூறுகின்றாா்கள். தென்பகுதியில் அவா்களுக் கென்று ஒரு வாக்கு வங்கி இருக்கக்கூடும்.  நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமா னவா்கள் அவா்கள்தான் என்று மக்கள் இன்றும் நம்புகின்றார்கள். அதனால், நாடுதழுவிய ரீதி யான வாக்குகள் அவருக்குக் கிடைக்குமா என்ற கேள்வி உள்ளது. அதனால், முதல் மூன்று வேட்பாளா்களைப் போல அதிகளவு வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவராக அவா் வருவாரா என்பதில் பலத்த சந்தேகம் உள்ளது.

நாமல் ராஜபகடஷ இறுதி நேரத்தில் களமிறங்கியமைக்கு காரணம் என்ன? 

பல்வேறுபட்ட கோணங்களில் இதனைப் பாா்க்க முடியும். ஒன்று – தற்போதைய ஜனாதிபதி வெற்றிபெற்றால் பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் அனைவரும் அவருடன் சென்று விடுவாா்கள்.  அடுத்த  தேர்தலிலும் அவருக்கு ஆதரவான கூட்டணியில் போட்டியிடு வதற்கும் விரும்புவாா்கள். அதனால் தமது கட்சியான பொது ஜன பெரமுன அழிந்துவிடும். அத னால், கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலையில் ராஜபக்சே குடும்பம் அந்த முடிவுக்கு வந்திருக்கலாம். இரண்டாவது கருத்து தற்போதைய ஜனாதி பதிக்கும் இவா்களுக்கும் இடையில் இரகசிய உடன்பாடு ஒன்றுள்ளது. இறுதி நேரத்தில் தமது முடிவை மாற்றலாம்.  அல்லது, இரண்டாவது தெரிவை அவருக்குக் கொடுக்குமாறு கேட்கலாம் என்ற சில கருத்துக்களும் உள்ளன.

அவா்கள் முதலில் வேறொரு வேட்பாள ரைத்தான் களத்தில் இறக்கப்போவதாக கூறிவந்தாா்கள். அவா் ஒரு வா்த்தகா். வெற்றிபெற முடியாத தோ்தலில் போட்டியிட அவா் மறுத்தமையால் நாமல் ராஜபக்சே களமிறக்கப்பட்டிருக் கலாம்.

தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் ஜே.வி.பி. இந்த தோ்தல் களத்தில் போட்டி யிடுகின்றது. ஆரம்பத்தில் அவா்களுக்கு இருந்த ஆதரவு அலை இப்போது குறைந்துவிட்டது என்ற ஒரு கருத்துள்ளது. இது எந்தளவுக்கு உண்மை?

ஆம். மக்கள் இது குறித்து விரிவாகச் சிந்திப்பாா்கள். இந்த ஜனாதிபதித் தோ்தல் முடிவடைந்தவுடன் பொதுத் தோ்தல் வரப்போகின்றது. கடந்த ஜனாதிபதித் தோ்த லில் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தோ்தலில் பெற்ற வாக்குகள் 4 இலட்டத்து 50 ஆயிரத்தைவிட சற்று அதிகமானது. அவா்களுக்கு நாடாளுமன்றத்திலும் பெருமளவு பலம் கிடையாது. இந்த நிலையில் பொதுத் தோ்தலில் அவா்கள் 113 ஆசனங்களைப் பெற வேண்டும். இல்லையெனில் மற்றைய கட்சிகளில் அவா்கள் தங்கியிருக்க வேண்டியிருக்கும்.

அநுரகுமாரவைப் பொறுத்தவரையில் இரண்டு வெற்றிகள் அவருக்குத் தேவையாக இருக்கின்றது. ஒன்று – ஜனாதிபதித் தோ்தலில் வெற்றிபெற வேண்டும். இரண்டு நாடாளுமன்றத் தோ்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். இப்போது நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றையும் சோ்த்து மூன்று ஆசனங்கள் மட்டும்தான் அவா்களுக்குள்ளது. ஆக, அவா்கள் 110 ஆசனங்களை மேலதிகமாகப் பெற வேண்டியிருக்கும். இது ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் சாதாரண விசயமல்ல. இதனை மக்கள் சிந்தித்து செயற்படும் போது தோ்தல் காலம் நெருங்க இரண்டு போட்டியாளா்கள்தான் இருக்கப்போகின்றாா்கள். இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதாகத்தான் நான் நினைக்கிறேன்.

நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத் திய அரகலய போராட்டமக் குழுவினா் அமைத்துள்ள போராட்ட முன்னணி என்ற அமைப்பும் இம்முறை களத்தில் இறங்கியிருக்கின் றாா்கள். அவா்களுக்கான ஆதரவு எவ்வாறுள்ளது?

உண்மையில் இவா்கள் அரசியல் முறை மையில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முயன்றாா்கள். இப்போதும் முயற்சிக்கின்றாா்கள். ஆனால், அவா்களுடைய கட்டமைப்புக்கள் கிராம மட்டத்திலிருந்து கட்டியமைக்கப்பட்டதாக இல்லை. அதனால்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி யாகப் பதவியேற்ற பின்னா் இந்த அரகலய போராட்டம் செயலிழந்தது. ஏனெனில் இதனை அடுத்த கட்டத்துக்கு அவா்களால் கொண்டு செல்ல முடியவில்லை. அதனால், அவா்கள் பிழையானவா்கள், அவா் களுடைய சிந்தனை தவறானது என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், அவா்களுடைய கட்டமைப்புக்கள் கிராமம் தோறும் கட்டியமைக் கப்படவில்லை. அவா்களுக்குக் கூட, அடுத்த கட்டம் என்ன என்பதில் தெளிவிருக்கவில்லை. ஏனெனில் கோட்டாபாய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை மட்டும் முன்வைத்துத்தான் அந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதனால், ஜனாதிபதி மாற்றமடைந் தவுடன் அடுத்த கட்டத்தை நோக்கி அவா்களால் செல்ல முடியவில்லை. கிராம மட்டத்திலிருந்து இதனை முன்னெடுக்காத நிலையில் அரசியலில் பெரிய தாக்கம் எதனையும் அவா்களால் ஏற்படுத்த முடியாது.

ரணில், சஜித் இருவருமே சிறுபான்மையினரின் வாக்குகள் தமக்கு கிடைக்கும் என்ற எதிா் பாா்ப்புடன் செயற்படுகின்றாா்கள். இதில் வெற்றி பெறக்கூடியவா் யாாா்?

இதில் மிகப்பெரிய பிளவு நிலை காணப் படுகின்றது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சில தலைவா்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கின்றாா்கள். வேறு சிலா் சஜித்துக்கு ஆதரவாக உள்ளாா்கள். இளைஞா்களைப் பொறுத்தவரையில் அநுரகுமாரவுக்கு ஆதரவுள்ளது.

மலையகத்தைப் பொறுத்தவரையில் ஜீவன் தொண்டமான் ரணிலுக்கு ஆதரவு. மனோ கணேசன், திகாம்பரம் போன்றவா்கள் சஜித்துக்கு ஆதரவாக உள்ளனா். ஆகவே மலையக வாக்குகளும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு மக்களுடைய வாக்குகள் எவ்வாறு செல்லும் என்பது வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளது. தமிழ்ப் பொது வேட்பாளரு டைய விஞ்ஞாபனம் வெளிவந்து அவருடைய பரப்புரைகள் தீவிரமடையும் போது அவருக்குப் பின்னால் கணிசமான வாக்குகள் செல்வதற்கும் வாய்ப்புள்ளது. அரியநேத்திரன் வெறுமனே ஒரு சுயேச்சையாக களமிறங்கவில்லை. அவருக்குப் பின்னால் பல சிவில் அமைப்புக்ககள், கட்சிகள் உள்ளன. இது வரலாற்றில் முதல்தடவை. முன்னா் குமாா் பொன்னம்பலம், சிவாஜி லிங் கம் போன்றவா்கள் களமிறங்கியிருந்தாலும், பரந்து பட்ட ஆதரவுத் தளத்துடன் ஒரு தமிழ் வேட்பாளா் களமிறங்கியிருப்பது இதுதான் முதல் தடவை. அதனால், அரியநேத்திரன் பெறும் வாக்கு கள் எவ்வளவு என்பது இங்கு முக்கியமாகக் கண் காணிக்கப்படும்.