மூதூரில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் பிரான்ஸ் நாட்டில் இயங்கும் தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 பேர் உயிரிழந்து இன்றுடன் (04) 18 வருடங்களாகின்றன.
இந்நிலையில், தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
2006 ஜூலை மாதம் 31ஆம் திகதி வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த இப்பணியாளர்கள் மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் 2006 ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளுர் பணியாளர்கள் உயிரிழந்தனர்.
இப்படுகொலையில் முத்துலிங்கம் நர்மதன், சக்திவேல் கோணேஸ்வரன், ரிச்சட் அருள்ராஜ், சிங்கராஜா பிறீமஸ், ஆனந்தராஜா மோகனதாஸ் ரவிச்சந்திரன், ரிஷிகேசன், கனகரத்தினம் கோவர்த்தனி, கணேஷ் கவிதா, செல்லையா கணேஷ் சிவப்பிரகாசம் ரொமிலா, வயிரமுத்து கோகிலவதனி, அம்பிகாவதி ஜெயசீலன், கணேஷ் ஸ்ரீதரன், துரைராஜா கேதீஸ்வரன், யோகராஜா கோடீஸ்வரன், முரளீதரன் தர்மரட்ணம், ஏ.எல்.மொகமட் ஜப்பா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
மூதூர் பொது வைத்தியசாலைக்கு அருகில் இயங்கிவந்த அக்ஷன் பாம் எனும் சர்வதேச தொண்டர் நிறுவனத்தில் 17 பணியாளர்களும் கடமையாற்றிக்கொண்டிருந்தபோது, சீருடை அணிந்து ஆயுதம் தரித்தோர் நிறுவன வளாகத்துக்குள் நுழைந்து, பணியாளர்களை நிலத்தில் குப்புறப்படுக்கச் செய்து, தலையில் சுட்டு படுகொலை செய்ததாக அன்றைய செய்திகளில் குறிப்பிடப்பட்டது.