முள்ளிவாய்க்கால் நினைவு விடுதலையின் விளைநிலம்-பேராசிரியர் முனைவர் குழந்தைசாமி

இறப்பு விட்டுச்சென்ற இதயவலியை எவரும் குணப்படுத்தமுடியாது. அன்பு விட்டுச் சென்ற நினைவை எவரும் திருட முடியாது. நமது விடுதலைப் போராளிகளும் மக்களும் விட்டுச் சென்ற வலியை எவராலும் போக்க முடியாது. அதனால் வலியை போக்கும் வடிகாலாக நினைவேந்தல் அமைந்துள்ளது. அந்த நினைவேந்தல் அன்பின் வெளிப்பாடாக உள்ளது. இந்த அன்பு நிறைந்த நினைவேந்தல் இறப்பை வாழ்வின் முடிவாக கருதாமல் புதிய வாழ்வின் வழியாக மாற்றுகிறது.
அப்போதுதான் வலி குறைக்கப்படும். இந்த வலியை வலி மையாக்குவது இந்த நினைவேந்தலாகும். இந்த வலிமையாக்கும் செயலை எவரும் தடுக்க முடியாது, தவிர்க்க முடியாது, தள்ளிப்போட முடியாது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முடிவல்ல. விடுதலையின் தொடக்கமாகும். இந்த விடுதலை வேள்வியை எவராலும் முடக்க முடி யாது. அது அனைத்து அன்பு உள்ளங்களிலும் அணையாது எரியும். அதனால் சீனாவில் சன்யாட் சன் இறந்து அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் நினைவேந்தல் நடத்தும்போது விடுதலைக் கனல் பற்றவைக்கப்பட்டது. அதுபோல வால்டர், ரூசோ போன்றோரின் கல்லறைகள் திறக்கப்பட்டு, பிரான்சு நாட்டில் புரட்சியாளர்கள் விடுதலை வேட்கையைப் பெற்றனர். எல் சல்வதோரில் பேராயர் ஆஸ்கர் ரோமேரோவின் கல்லறையில் நினைவேந்தல் நடத்தும்போது இராணுவ ஆட்சியின் கொடுமையிலிருந்து விடுதலைபெற வேண்டிய ஆற்றலை மக்கள் பெற்றனர். பிலிப்பைன்சு நாட்டின் விடுதலை வீரர் ரிசாலின் கல்லறையில் நினைவேந்தல் நடத்தும்போது இசுபானிய ஆட்சியை தூக்கி எறியும் துணிவைப் பெற்றனர். இவர்கள் வலியை வலிமையாக்கி வழிகாட்டினர்.
நினைவேந்தல் ஒரு வரலாற்று ஆசிரியன். கடந்த காலத்தை துல்லியமாக சொல்லிக் கொடுத்து, இன்றைய இளைய தலைமுறையினரை தூண்டி எழுப்பும் அறிவுள்ள ஆசானாக செயல்படுகிறது. பண்படுத்தும் பயிற்சிப் பாசறையாக இந்த வரலாற்று ஆசிரியன் வடிவமைக்கிறான். உணர்வு கள், உணர்ச்சிகள், வேதனைகள், கவலைகள், கையறுநிலை, எதிர்நோக்கு, சவால்கள், மறக்கமுடியாத நிகழ்வுகள், கண்ணீர் போன்றவை நிறைந்த பயிற்சி பாசறையாக அமைகிறது. நினைவேந்தலில் உணர்வுகள் வெளிவருகின்றன. சிந்தனைகள் தெளிவுபடுத்தப்படுகின்றன. வழிப்பிறக்கிறது. உணர்வுகளையும் சிந்தனைகளையும் வெளிக் கொணர்ந்து, நல்வழிகாட்டுவது சிறந்த ஆசிரியரின் கடமையாகும். வெற்றிக்கும், விடுதலைக்கும், ஆக்கபூர்வமான செயல்களுக்கும் ஆற்றல்படுத்து வதுதான் நல்லாசிரியனின் நற்செயலாகும். அதை தான் நினைவேந்தல் செய்கிறது. நினைவேந்தல் நடைபெறும் இடம் மிகச்சிறந்த வகுப்பறையாகும். வாழ்வுக்கும், வழிக்கும், விடுதலைக்கும், எழுச்சிக் கும் வழிகாட்டும் வகுப்பறையாக உள்ளது.
கொலைகாரர்கள் சட்டங்களை உருவாக்கும் நாட்டில் நீதியை காணமுடியாது என்று பாப் மார்லே கூறுவதை இந்த நினைவேந்தல் நமக்கு உணர்த்தும் பாடமாகும். அதை மறக்காமல் செயல்பட தூண்டும் பள்ளியறையாகும்.
நினைவேந்தல் ஒருங்கிணைக்கும் ஆற்றல் படைத்தது. பல்வேறு இடங்களிலிருந்தும் சம யங்களிலிருந்தும், சாதிகளிலிருந்தும் மக்கள் ஒன்றுகூடுவர். உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் இந்த நினைவேந்தலை கொண் டாடுகின்றனர். அனைத்து தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் புள்ளியாக இந்த நினைவேந்தல் உள்ளது.  தமிழர்களுக்கு நடந்தது ஓர் இனப்படுகொலையாகும் என்று நினைவுபடுத்து கிற செயலாகும். இனப்படுகொலைக்கு நயன்மை கிடைக்க நினைவேந்தல் பயன்படுகிறது. நயன்மை கிடைக்க பாதிக்கப்பட்ட தமிழர்களை ஒருங்கி ணைக்கும் ஆயுதமாக நினைவேந்தல் உள்ளது. முள்ளிவாயக்காலில் நடந்த இனப்படுகொலை மனித வாழ்வுரிமை மீறலாகும் அல்லது பறித் தலாகும் என்பதை உலகிற்கு எடுத்துரைக்க மக்களை ஒருங்கிணைக்கிறது. இப்படிபட்ட இனப்படுகொலை எவ்வினத்திற்கும் நடக்கக் கூடாதென எச்சரிக்கை விடுக்க மக்களை ஒருங்கி ணக்கிறது. கூடி நின்று குரல் எழுப்பினால் உலகம் ஏறெடுத்து பார்க்க நினைவேந்தல் மக்களை ஒருங்கிணைக்கிறது. விடுதலை, நயன்மை, சகோதரத்துவம் போன்றவை கூட்டுமுயற்சியால் கிடைப்பவை என்பதை தெளிவாக்க இந்த நினைவேந்தல் மக்களை ஒருங்கிணைக்கின்றது.
இறுதியாக நினைவேந்தல் வலியை வலிமை யாக்கும் ஆற்றலாக உள்ளது. கடந்தகால வரலாற்றை தெளிவாக உணர்வுடன் எடுத்துக் கூறும் ஆசானாக நினைவேந்தல் இருக்கிறது. நினைவேந்தல் பலதரப்பட்ட மக்களை ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் ஆற்றல் கொண்டது. இனப்படுகொலை அல்லது நயன்மை அல்லது வாழ்வுரிமை பறிப்பு போன்ற ஒரு தளத்தில் ஒருங்கிணைக்கும் ஆற்றல் உள்ளது. முள்ளிவாய்க் கால் நினைவு மூவுலகிற்கு முன்வைக்கும் முடிவுறா கோரிக்கையாகும். விடுதலையில் விளைநிலமாக முள்ளிவாய்க்கால் விளங்குகிறது.
உங்கள் கனவை நனவாக்குவது
எங்கள் காணிக்கை !