முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுகூரலுடன் வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் இன்று (12) ஆரம்பானது. அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.  இதன்படி, முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கும் நிகழ்வு இன்று (12) யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நோக்கில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியானது யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் காய்ச்சி வழங்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்கும் செயற்பாட்டில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் புதன்கிழமை 14ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கட்டட தொகுதியில் மாபெரும் இரத்ததான நிகழ்வு ஒன்றினையும் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதேநேரம், முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அனுபவித்த துயரங்களை எடுத்துக்காட்டும் முகமாக பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் கண்காட்சி ஒன்றினையும் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.