முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்து வரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கோரி, மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (30) முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்னால் பாரிய தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அண்மைக்காலமாக முல்லைத்தீவு கடலில் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலைப் பயன்பாடு மற்றும் வெடிவைத்து மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளன.
இதனால் சாதாரண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டபோது, சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தத் தேவையான ‘ஆளணி வசதிகள்’ தம்மிடம் இல்லை என நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இப்பதிலானது மீனவர்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய தினம் (31) முல்லைத்தீவிற்கு வருகை தரவுள்ள கடற்றொழில் அமைச்சர், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான மற்றும் முறையான தீர்வை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு தீர்வு எட்டப்படாத பட்சத்தில், தமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.



