முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால,சீனத் தூதுவர் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹோங் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவைச் சந்திப்பதற்கு முன்னர்  கொழும்பில் உள்ள சீனத் தூதுவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சந்தித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலத்துக்கமைய, உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

இதற்கு இணங்க, தேவையான ஆவணங்கள் கிடைத்தவுடன் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைப்பதாக முன்னாள் ஜனாதிபதி சிறிசேன அண்மையில் தெரிவித்தார்.