முத்து நகர் காணி அபகரிப்பு: எதிர்வரும் 10 நாட்களுக்கு தீர்வு வழங்குவதாக பிரதமர் அலுவலகம் உறுதி

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  முத்து நகர் விவசாய காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்கு தீர்வு வழங்குவதாக பிரதமர் அலுவலகம் உறுதியளித்துள்ளது.

புதன்கிழமை அன்று சுமார் 12 மணித்தியாலங்கள் பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்கார்கள் அன்றைய தினம் இரவு பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  முத்து நகர் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சுமார் 800 ஏக்கர் விவசாய காணி சூரிய மின்சக்தி திட்டத்துக்காக அரசாங்கத்தால் இந்திய தனியார் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமது விளை நிலங்களை தமக்கு பெற்றுத்தருமாறு வலியுறுத்தியும் புதன்கிழமை  (24) முத்து நகர் விவசாயிகள் கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10.30 மணியளவில் ஒன்று கூடிய ஆர்பாட்டக்காரர்கள் அன்றைய தினம் இரவு வரை  உரிமைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்களை அழைத்து கலந்துறையாடியிருந்ததுடன், விவசாய காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாகவும்  உறுதியளித்துள்ளது. இதன்போது போராட்டக்காரர்கள் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

போராட்டத்துக்காக 2 பேருந்துகளில் பொதுமக்கள் வருகைத் தந்திருந்ததுடன், சுமார் 12  மணி நேர போராட்டத்தின் பின்னர் அம்மக்கள் முத்து நகர் நோக்கி பயணமானார்கள்.  விவசாயிகளிடமிருந்த காணியை  அரசாங்கம் பறித்து வெளிநாட்டு நிறுவனத்திடம் கையளித்துள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு உரிய காணியை அரசாங்கம் சூரிய மின்சக்தி திட்டத்துக்காக ஒதுக்கியுள்ளதோடு மாற்றுக் காணிகளை வழங்காது விவசாயத்துக்கு பயண்படுத்தப்பட்ட குளங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  முத்துநகர் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.