மீள நிகழாமையே தற்போது அவசியம்: விமல் வீரவங்ச

உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடி கடந்த காலத்தை தோண்டும் நடவடிக்கை தற்போது தேவையற்ற விடயம் என்றும் மாறாக எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கு மக்களின் இதயங்களை குணப்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழியில் இடம்பெறும் அகழ்வு பணிகளின் போது பாடசாலை மாணவரின் நீல நிற பை ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து வினவப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அகழ்வு பணிகள் நிறைவடையும் வரையில் எம்மால் இறுதி முடிவுக்கு வர முடியாது.
தொடர்ந்தும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது சில சந்தர்ப்பங்களில் இராணுவத்தினரின் ஆடை அல்லது அதிலிருந்த இலக்க தகடு ஏதாவது மீட்கப்படுமாயின் விசாரணைகள் வேறு பக்கம் திரும்பும்.
இன்னும் 15 நாட்களுக்கு அங்கு கண்காணிப்பு, பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
எனவே, அந்த 15 நாட்களுக்கு பின்னர், எமக்கு இறுதி முடிவுக்கு வரமுடியும் என்றும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இது யுத்தம் நிலவிய நாடாகும். சகல பக்கங்களில் இருந்தும் துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே, உயிரிழந்தவர்களின் யாருடைய துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர்கள்? என்பது மட்டுமே தெரியாமல் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடி கடந்த காலத்தை தோண்டும் நடவடிக்கை தற்போது தேவையற்ற விடயமாகும். மாறாக எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கு மக்களின் இதயங்களை குணப்படுத்த வேண்டும்.எனினும் இதயங்களை குணப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பதிலாக, மீண்டும் வெறுப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சாடியுள்ளார்.

இதனூடாக இலங்கைக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை. சர்வதேச சக்திகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இலங்கையில் இனங்களுக்கு இடையே வெறுப்பை ஏற்படுத்த வேண்டிய தேவையே காணப்படுகிறது. அவர்களின் தனிப்பட்ட அரசியலுக்காகவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.