“இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம்” என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க 3 நாள் அரசுமுறை பயணமாக முதல்முறையாக இந்தியா சென்றுள்ள நிலையில், ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் குறிப்பாக இந்தியா, இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டனர். மேலும் மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த அக்டோபரில் இலங்கை வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக அநுர குமார இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசநாயகே உடனான சந்திப்புக்கு பின் பிரதமர் மோடி பேசியதாவது;
“இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் இந்திய பயணத்தால் இரு நாடுகளுக்கிடையேயான உறவு மேலும் வலுப்படும். பெற்றோலியம், எரிவாயு, சூரிய ஒளி, மின்சாரம் துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு வலுப்படும். காங்கேசன் துறைமுகத்தை புனரமைக்க நிதி உதவி அளிக்கப்படும்.
இலங்கையில் பால்வளம் மற்றும் மீன்வள துறைகளின் வளர்ச்சிக்கு இந்தியா நிதி உதவி அளிக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். நேரடியான இணைப்பு, டிஜிட்டல் இணைப்பு மற்றும் ஆற்றல் இணைப்பு ஆகியவை எங்கள் கூட்டாண்மையின் முக்கிய தூண்களாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளோம். மின் இணைப்பு, பெற்றோலிய குழாய் இணைப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.
பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பிறகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பேசியதாவது;
இலங்கை ஜனாதிபதியான பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதோடு, இந்தியாவின் சிறப்பான வரவேற்புக்கு நன்றி. இலங்கை நிதி நெருக்கடியில் இருந்த போது இந்தியா உதவி செய்தது மிகப்பெரும் விஷயம். மக்களின் நலனுக்கான பாடுபட இலங்கை மக்கள் எங்களை தேர்வு செய்துள்ளார்கள்.
இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என பிரதமர் மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கையை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். கடல் வளம் காக்க சுருக்குமடி வலை பயன்படுத்துவதை மீனவர்கள் கைவிட வேண்டும். சுருக்குமடிவலை பயன்படுத்துவதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே சுருக்குமடிவலை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு அனுமதிக்காது எனவும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதி அளித்துள்ளார். மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.