இலங்கை அரசியலில் ‘பௌத்தவாதம்’ என்பது ஒரு ஆன்மீக மார்க்கமாக அல்லாமல், காலங்காலமாக சிறுபான்மை இனங்களை அடக்கியொடுக்கும் ஓர் அரசியல் ஆயுதமாகவே கையாளப்பட்டு வருகின்றமை வரலாறு நெடுகிலும் காணப்படுகிறது.
கொழும்பில் உள்ள அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத் தலைமையகத்தில் நேற்று முன்தினம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று திரண்ட மகா சங்கத்தினர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு விடுத்துள்ள ‘பத்தம்சப் பிரகடனம்’ மற்றும் கடும் எச்சரிக்கைகள், இலங்கையை மீண்டுமொரு மதவாத இருண்ட யுகத்திற்குள் தள்ளும் முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது.
பௌத்த மதத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் இந்த அதிகாரப் போர், ஒரு ஜனநாயக நாட்டின் விழு மியங்களைச் சிதைப்பதோடு, ‘பௌத்தவாதம்’ என்பது இலங்கைக்கு தீராதவொரு சாபக்கேடு என்பதை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக வேந்தர், மேல் மாகாண பிரதான சங்கநாயக்க மற்றும் மகா சங்க சம்மேளனத்தின் பிரதான ஆலோசகருமான முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமாஸ் ஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் அனுநாயக்க மற்றும் பிரதான லேக்காதிகாரி, அக்கிமஹாம கோபாத்தியாய பண்டித பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர், மொரட்டுவ லூனாவ ஸ்ரீ போதிராமதிபதி மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சிங்கள ஆய்வுத்துறைத் தலைவர் பேராசிரியர் அகலகட சிறிசுமன தேரர் என்று அணிதிரட்ட முக்கிய தேரர்களின் பட்டியல் நீளுகின்றது.
இந்த தேரர்கள் வெறுமனே விகாரைகளில் கடமையாற்றுபவர்கள் அல்ல. சிங்கள மக்கள் மத்தியில் தங்களின் கல்விச் செழுமையால் வெகு வாக மதிக்கப் படுகின்ற புத்திஜீவிகளும் கூட. அவ்வா றான நிலையில் குறித்த தேரர்கள் உள்ளடங்கலான மகா சங்கத்தினரின் நிறைவேற்றியுள்ள பிரகடனத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அதிர்ச்சியளிக்கின்றன.
குறிப்பாக, 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசி யலமைப்புகளில் பௌத்தத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன் னுரிமையை எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது என்ற முதல் கோரிக்கையானது, இலங்கையை மதச்சார்பற்ற நாடாகவோ அல்லது சமத்துவமான நாடாகவோ ஒருபோதும் மலர விடமாட்டோம் என்பதற்கான பகிரங்க அறைகூவல் என்பதோடு பௌத்த குடியரசாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற சித்தாந்தத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது நாட்டில் இந்து மதத்தைப் பாதுகாப்பதைப் பார்த்து அநுரகுமார பாடம் கற்க வேண்டும் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறியிருப்பது, அண்டை நாட்டின் மதவாத அரசியலை இலங்கைக்குள் இறக்குமதி செய்யத் துடிக்கும் ஆபத்தான போக்கைக் காட்டுகிறது.
ஒரு நாட்டின் தலைவன் அனைத்து மதத்தினருக் கும் பொதுவானவனாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு குறிப்பிட்ட மதத்தின் பாதுகாவலனாக மட்டும் இயங்குவது ஜனநாயகப் படுகொலையாகும். அத்துணை கல்வித்தகையுடைய முருத்தொட்டுவே ஆனந்த தேரர் போன்றவர்களின் கூற்றுக்கள் மாதவாத பிடியின் அதியுச் சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அதேநேரம் மேற்படி தேரர்களின் கட்டுறுதியான மதவாதக் கூச்சல்களுக்குப் பின்னால் இருப்பவர்களின் பின்னணியை ஆராய்ந்தால், அது ‘தர்ம ராஜ்ய’ போதனை அல்ல, மாறாக ‘இராணுவமயமாக்கப்பட்ட இனவாதம்’ என்பது தெளிவானது.
அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின் தலைவர் சந்திர நிமல் வாகிஸ்ட போன்றவர்கள் இம் மாநாட்டின் முக்கிய சூத்திரதாரிகளாக உள்ளனர். இவர் ஒரு ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் மட்டுமல்ல, முப்பது ஆண்டுகால யுத்தத்தின் போது தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்து பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் செயற்பட்டவர்.
ஒரு முன்னாள் உளவுத்துறை அதிகாரி, ஆன்மீக அமைப்பான பௌத்த மகா சம்மேளனத்திற்குத் தலைமை தாங்குவதும், யாழ்ப்பாண அரசாங்க அதிபரை அச்சுறுத்தும் வகையில் கடிதங்கள் எழுதுவதும், இலங்கையில் பௌத்த மதம் எவ்வாறு ‘சீருடை அணிந்த இனவாதமாக’ உருமாறியுள்ளது என்பதற்குச் சான்றாகும்.
ஆன்மீகப் போர்வையில் ஒளிந்திருக்கும் இத்தகைய புலனாய்வுப் பின்னணிகள், சிறுபான்மை மக்கள் மீதான உளவியல் ரீதியான ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்துகின்றன. அதுமட்டுமன்றி பிரகடனத்தின் ஓரம்சமாக வடக்கு,கிழக்கில் பௌத்த அடையாளங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அவற்றைத் தடுக்க வேண்டு மென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில் யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரை விவகாரம், பௌத்த ஆக்கிரமிப்பு அரசியலின் உச்சக்கட்டம். முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா போன்றவர்களின் நேரடி அனுசரணையுடன், எவ்வித சட்டபூர்வ அனுமதியு மின்றி இராணுவத்தினரால் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரை, பௌத்த தர்மத்தின் அடையாளமல்ல. அது தமிழ் மக்களின் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பின் சின்னம்.
திஸ்ஸ விகாரை சம்பந்தமாக கடந்தவார நடுப் பகுதியில் புத்தசாசன அமைச்சு நடத்திய பேச்சுவார்த்தைக்கு நிலங்களை இழந்த பொதுமக்களை அழைக்காமல், விகாரையின் விகாராதிபதியை மட்டும் அழைத்து ஆலோசிப்பது எவ்வகையான நீதி? பாதிக்கப்பட்டவர்களைப் புறக்கணித்துவிட்டு, ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகுலுக்கு வது அநுரகுமார அரசாங்கம் சொல்லும், ‘இன,மதவாதமற்ற மாற்றத்திற்கு’ விடப்பட்ட சவாலாகும். இது பௌத்த மேலா திக்கத்தை நிலைநிறுத்த சட்டத்தை வளைக்கும் மிகக் கீழ்த்தரமான செயலாகும்.
மகா சங்கத்தினர் முன்வைத்துள்ள 10 அம்சப் பிரகட னத்தில் ‘தொல்பொருள் பாதுகாப்பு’ என்ற போர்வையில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிகளை அபகரிக்கும் திட்டம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே குருந்தூர் மலை, திருகோணமலை போன்ற பகுதிகளில் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி சிலைகள் வைக்கப்படுவதும், விகாரைகள் எழுப்பப்படுவதும் சட்டத்தின் ஆட்சியை கேலிக்குள்ளாக்குகின்றது.
அத்துடன் பிரகடனத்தில் ‘பிக்குகளை விமர்சிப் பவர்களுக்கு எதிராகக் கடும் சட்டங்கள் வேண்டும்’ என்ற கோரிக்கை, மதத்தின் பெயரால் செய்யப்படும் அநீதிகளை எவரும் தட்டிக்கேட்கக் கூடாது என்ற சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடாகும்.
வறுமையைப் பயன்படுத்தி மதமாற்றம் செய்வ தைத் தடுக்க வேண்டும் எனக்கூறும் இவர்கள், அதே வறுமை யால் வாடும் வட-கிழக்கு மக்களின் காணிகளை மதத்தின் பெயரால் பறிப்பது எந்த தர்மத்தில் சேரும்? அது ஆன்மீகப் போர்வையில் முன்னெடுக்கப்படும் நிலப் பறிப்பு யுத்தமே தவிர வேறில்லை.
கடந்த காலங்களில் இதேபோன்ற பௌத்தவாதக் கோசங்கள் தான் நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. தற்போதும் அதன் தாக்கங்கள் நீடிக்கின்றன. 1956 இன் சிங்கள மட்டும் சட்டம் முதல், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிந்தைய முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் வரை அனைத்துக்கும் பௌத்த மதத்தின் பெயராலான தீவிரவாதப் போக்குகளே வித்திட்டன. இப் போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையிலும், அரசாங்கத்தைப் பழிவாங்கும் நோக்கோடும், மதவாதத்தைத் தூண்டி குளிர்காயவும் முற்படுவது மகா சங்கத்தினரின் பொறுப்பற்ற செயலாகும். நாட்டு மக்களின் பசியை விடவும் மதச்சின்னங்களின் பிரம்மாண்டமே அவர்களுக்கு முக்கியமானதாகத் தெரிகிறது.
பௌத்த பிக்குகளின் இத்தகைய அரசியல் தலையீடுகள், இலங்கையின் ஜனநாயகப் பண்புகளை முற்றாகத் தகர்த்து வருகின்றன. பிரிவெனா கல்வி மற்றும் பௌத்த பல்கலைக்கழகங்களின் சுயாதீனம் பற்றிப் பேசும் இவர்கள், அதேநேரத்தில் பிற மதத்தவர்களின் வழிபாட்டு உரிமைகளைச் சிறுமைப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
விகாரைகளைச் சுற்றியுள்ள நிலங்களை ‘தேசிய மரபுரிமை’ என்ற பெயரில் அபகரிப்பதன் மூலம், தமிழ் பேசும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பூர்வீக அடையாளங்களையும் அழிக்கும் ‘பண்பாட்டு இனப்படு கொலையை’ தேரர்களே அரங்கேற்றி வருகின்றார்கள்.
அதுமட்டுமன்றி, முன்னாள் படையதிகாரிகளான கமல் குணரத்ன, சரத்வீரசேகர போன்றவர்களின் மறைகரம் இருப்பதும் மகா சங்கத்தினரின் நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துவதாக உள்ளது. அவ்வாறிருந்தபோதும் இதனைத் தட்டிக்கேட்க வேண்டிய நீதித்துறையும், நிர்வாக மும் மதத் தலைவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து போவது தேசத்தின் வீழ்ச்சிக்கான அறிகுறியாகும்.
பௌத்த மதக் கொள்கைகள் தனிமனித வாழ் வியலை வடிமைப்பதில் மேன்மையானவை. ஆனால், இலங்கையில் முன்னாள் படை அதிகாரிகளாலும், அரசிய லில் தடம் பதிக்கத் துடிக்கும் பிக்குகளாலும் ஒரு ‘நச்சுக் கருவியாக’ மாற்றப்பட்டுள்ளது.
இனவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுரகுமார திசாநாயக்க, இந்த மதவாத அழுத்தங்களுக்குப் பணிந்து போவாரானால், அவரும் முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தோல்வியடைந்த தலைவராகவே வரலாற்றில் பதிவாகுவார்.
வடக்கிலும் கிழக்கிலும் மக்களின் நிலங்களைப் பறித்து விகாரைகளை எழுப்புவதும், மகா சங்கத்தினரின் சட்டவிரோதக் கோரிக்கைகளுக்குத் தலைவணங்குவதும் இலங்கையின் அழிவுப்பாதையை மீண்டும் திறப்பதாகும்.
உண்மையான நல்லிணக்கம் என்பது நில ஆக்கிரமிப்பிலும், ஒரு மதத்திற்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதிலும் இல்லை. அனைத்து மக்களையும் சமமாக நடத்துவதிலேயே உள்ளது. இந்த உண்மையை உணராதவரை, இலங்கையில் பௌத்த வாதம் என்பது என்றும் தீராதவொரு ‘சாபக்கேடாகவே’ தொடரும்.




