மாா்ச் ஜெனிவா அமா்வை எதிா்கொள்ள காய் நகா்த்தும் ரணில் – ஆபிரிக்காவில் முக்கிய சந்திப்புக்கள்

geneva மாா்ச் ஜெனிவா அமா்வை எதிா்கொள்ள காய் நகா்த்தும் ரணில் - ஆபிரிக்காவில் முக்கிய சந்திப்புக்கள்ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கை புதிய இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் உட்பட பல நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வில் எழக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய அணுகுமுறைகளை இலங்கை பின்பற்ற ஆரம்பித்துள்ளது.

அணிசேரா மாநாட்டுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகண்டா செல்லவுள்ளார். 19ஆவது அணிசேரா மாநாட்டுக்காக 120 நாடுகளின் தலைவர்கள் உகண்டாவில் கூடியுள்ளனர். இந்த மாநாட்டைப் பயன்படுத்தி ஆபிரிக்க தலைவர்கள் உட்பட பல தலைவர்களுடன் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஒத்துழைப்பு உட்பட பல்வேறுவிடயங்கள் குறித்து ஆராயவுள்ளார்.

மார்ச் மாத அமர்வில் இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பாக பொறுப்புக் கூறும் திட்டத்தை முன்வைத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இறுதித் தீர்மானத்தை இலங்கை நிராகரித்துள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைக்கும் நாடுகளில் பிரதானமானதாக பிரிட்டனுடன் இலங்கை ஜெனிவா அமர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கப்பல்களை அனுப்புவதற்கு அமெரிக்காவும் பிரிட்டனும் விடுத்த வேண்டுகோள்களை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள விடயமறிந்த வட்டாரங்கள், ஜெனிவா அமர்விற்கு முன்னர் இந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகவே ஜனாதிபதி கப்பலை அனுப்ப இணங்கினார் என தெரிவித்துள்ளன.