மாவீரர் நாளில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியம்-வேல்ஸில் இருந்து  அருஸ்

தமிழீழ தாயக விடுதலைக்காக போராடி தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மிகவும் எழுச்சியுடனும் உணர்வு பூர்வமானதாகவும் நிகழ்ந்து முடிந்துள்ளன. அந்த மாவீரர்களை எமது இனத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்த பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

தாயகத்தில் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை என்பது மிகவும் அதிகமானது. வடக்கு கிழக்கில் உள்ள பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் இடம் பெற்ற நிகழ்வுகளில் ஒட்டுமொத்தமாக கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை இலட்சத்திற்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில் உள்ள சம்பூரில் இடம் பெற்ற மாவீரரது பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வில் 500 இற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டது அதற்கு ஒரு சிறு உதாரணம். வடக்கு கிழக்கில் கடுமையான மழை மற்றும் புயல்காற்று வீசியபோதும் தமிழ் மக்கள் தங்கள் அஞ்சலிகளைச் செலுத்தத் தவறவில்லை.

அஞ்சலி செலுத்தும் இடங்களுக்கு செல்ல முடியாத மேலும் பல ஆயிரம் மக்கள் தமது இல்லங்களில் அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர். அதாவது மக்களின் இந்த ஒருங்கிணைவு என்பது கடந்த சில வாரங்களாக தமிழர்கள் மத்தியில் பரப்பப்ட்டுவந்த தேசியம் மழுங்கிவிட்டது என்ற செய்தியை பொய்யாக்கியுள்ளது.

  தமிழத் தேசியமும், தமிழீழ விடுதலையும் என்றும் ஈழத்தமிழர்கள் மத்தியில் இருந்து அகற் றப்பட முடியாதவையே. எமது வரலாறும் அத னைத் தான் எமக்கு கற்றுத்தந்தது. எல்லாள மன்னன், பண்டார வன்னியன், சங்கிலிய மன்னன் என நாம் கற்றுக்கொண்ட வரலாறுகள் எல்லாம் நாம் தமிழர்கள் என்று கூறியதே தவிர நாம் அனைவரும் இலங்கையர்கள் என்று கூறவில்லை. இலங்கை என்ற தீவுக்குள் இருந்த இரண்டு அரசுகளைப் பற்றியே அவை கூறின.

2009 ஆம் ஆண்டு வரையிலும் இருந்த தமிழீழ நடைமுறை அரசும் அதனைத் தான் பறைசாற்றி நின்றது. அதாவது தமிழீழம் என்பது உருவாக்கப்பட வேண்டியது அல்ல மாறாக அது எதிரியிடம் இருந்து மீட்டு எடுக்கப்படவேண்டியது அல்லது பாதுகாக்கப்பட வேண்டியது.

பிரித்தானியர்களின் வெளியேற்றத்தின் பின்னர் நாம் எமது எல்லைகளைத் தான் இழந்தோமே தவிர எமது தமிழ் இனத்தின் இறைமையை இழக்கவில்லை. அந்த இறைமை தான் அகிம்சைப்போராகவும், ஆயுதப்போராகவும் எம்மை போராடத் தூண்டியது. நாம் ஒரு இறை மையுள்ள இனம் இல்லையெனில் ஒரே இலங்கை என்ற சொற்பதத்திற்குள் 1948 ஆம் ஆண்டுடன் கரைந்து போயிருப்போம்.

தனது பொருளாதார வீழ்ச்சியை சரி செய்து, சிங்கள மக்களின் இருப்பை தக்கவைப்பதற்காக புதிய இலங்கை அரசு கூறிவரும் நாம் எல்லோரும் ஒரே இலங்கையர் என்ற கோசத்தையும், அதற்கு ஆதரவாக எம்மில் சிலர் முன்வைக்கும் வாதங்களையும் ஒட்டுமொத்த இலங்கையும் அமைதியாக இருக்க வடக்கு கிழக்கில் மட்டும் ஆர்ப்பரித்து எழுந்த மாவீரர் தினம் தவிடுபொடியாக்கியுள்ளது.

நவம்பர் மாதம் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் மாதமாக உலகம் எங்கும் உள்ளது ‘Día de los Muertos’ (Day of the Dead) . பிரித்ததானியாவிலும் அது அனுஸ்டிக்கப்படுகின்றது. முதலில் மெக்சிக்

கோவில் தான் அது ஆரம்பமாகியது. அங்கு சென்ற ஸ்பெயின் நாட்டவர்கள் அதனை அங்கு பரப்பியிருந்தனர். ஆனால் தமிழீழத்தைப் பொறுத் தவரையில் அந்த மாதத்தின் 27 ஆம் நாள் தான் களமுனையில் காயப்பட்ட முதலாவது போராளி தனது உயிரை தாயகத்திற்காக அர்ப்பணித்திருந்தார்.

நவம்பர் மாதத்தில் இலங்கையில் மூன்று நினைவுதினங்கள் இடம்பெறுகின்றன. நவம் பர் 5 ஆம் நாள் இலங்கையில் இடம்பெற்ற இரண்டு ஆயுதப்புரட்சிகளின் போது கொல்லப் பட்டவர்களை ஜே.வி.பியும் சிங்கள மக்களும் நினைவுகூர்ந்து வருகின்றனர். நவம்பர் 19 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட ஏறத்தாழ 30,000 படையினரை சிங்கள மக்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். நவம்பர் 27 ஆம் நாள் தாயக விடுதலைக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த போராளிகளை தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

அதாவது இலங்கைக்குள் ஒரு இனத்தை சேர்ந்த மக்கள் வாழவில்லை என்பதை நவம்பர் மாதம் மிகவும் தெளிவாக உலகத்திற்கும், நாம் எல்லோரும் ஒரே இலங்கையர்கள் என கோசமிடு பவர்களுக்கும் சொல்லியுள்ளது.

எனவே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் மேற்கொண்ட முடிவு என்பது வினைத்திறன் அற்ற போலித் தேசியம் பேசியவர்களை பதவியில் இருந்து தூக்கி யெறிந்ததே தவிர தேசியத்திற்கு எதிரானது அல்ல.

  2024 ஆம் ஆண்டு என்பது உலகின் மனித வரலாற்றில் அதிக தேர்தல்களைக் கொண்ட ஆண்டாக சரித்திரம் படைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமையுள்ள 70 இற்கு மேற்பட்ட நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்றுள் ளன. அவற்றில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரா ன்ஸ், இந்தியா என மிக முக்கிய நாடுகளில் முன் பிருந்த ஆட்சிகள் அகற்றப்பட்டுள்ளன அல்லது அவர்களின் பலம் குறைக்கப்பட்டுள்ளது. இது ஆட்சியில் இருந்தவர்களின் தவறான கொள்கைகள் மற்றும், வினைத்திறன் அற்ற தன்மைக்கான பதிலாகவே பார்க்கப்படுகின்றது.

புதிய அரசு வாக்குறுதிகளைக் காப்பாற்ற வில்லை எனக் கூறி பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் இம்பெற்று சில மாதங்களில் மீண்டும் தேர்தலை நடத்துமாறு  இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அதாவது மக்கள் தமது இருப்பு மற்றும் எதிர்காலம் குறித்து அதிகம் அக்கறைப்படுகின்ற னர். தமது இறைமை குறித்து அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதன் ஒரு வெளிப்பாடே இலங்கையில் இடம்பெற்றுமுடிந்த அரச தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட மாற்றங்கள்.

சிங்கள மக்கள் தமது இருப்பைத் தக்கவைப் பதற்காக மேற்கொண்ட மாற்றம் அது. தற்போதைய அரசும் வினைத்திறனுடன் செயற்படாது போனால் மீண்டும் மாற்றங்கள் நிகழும். அதற்கு அவர்கள் பழகிவிட்டனர். பிரித்தானியாவிலும் அது தான் நிகழ்கின்றது.

தமிழ் மக்களும் அதனை தான் தற்போது கையில் எடுத்துள்ளனர். அரச தலைவர் தேர்தலில் ஒரு குறுகிய காலத்திற்குள் 226,000 வாக்குகளை தமிழ்த் தேசியத்திற்காக வழங்கியவர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் போலியாக தமிழத் தேசியம் பேசியவர்கள், தமிழ் மக்களை ஏமாற்றி யவர்கள், மக்களுக்காக பணியாற்ற மறந்தவர்கள் என்பவர்களைத் தண்டித்துள்ளனர்.

அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு பகுதிகளில் பதவிகளை இழந்த வர்கள் ஓட்டுக்குழுக்களின் பிரதிநிதிகள், இலங்கை அரசுக்காக பணியாற்றியவர்கள், தமிழ்த்தேசியம் என்ற பெயரில் தமிழ் மக்களை ஏமாற்றியவர்கள். என்பவர்களே. அவர்களால் யாருக்கும் எந்த பலனு மில்லை.

இதனை நன்கு அறிந்த தேசிய மக்கள் சக்தி தமிழர் பகுதிகளில் தமிழர்களைக் களமிறக்கி தமிழ் மக்களின் இந்த மாற்றத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளது. அதாவது தமிழ் மக்களின் இந்த மாற்றத்தை உள்வாங்கிக் கொள்வதற்கான பலமான தமிழர் கட்டமைப்பு ஒன்று இல்லை என்பதும், அரச தலைவர் தேர்தலின் போது கட்டியமைக்கப்பட்ட அமைப்பு உடைந்து போனதும் தான் அதற்கு காரணம். அது தான் தென்னிலங்கைக் கட்சியின் வெற்றிக்கான காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் தமிழத் தேசியமும், விடுதலைக் கான வேட்கையும் தமிழர் மனங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. அது தனக்கான சரியான பதையை தேடுகின்றது. எனவே தான் நாடாளுமன்றத் தேர்தலில் தொலைந்துபோனதாக சித்தரிக்கப்பட்ட தமிழத்தேசியம் இரண்டு வாரங்களில் மிகப்பெரும் சக்தியாக மாவீரர் வாரத்தில் எழுந்து தனது இருப்பைக் காட்டியுள்ளது. ஆனால் அதனை முன்னெடுத்து செல்லவேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் கடமை என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.