புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள தேவிபுர மாவீரர் துயிலும் இல்லத்தினை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவதற்கு எதிராக இன்று (9) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கரிகாலன், மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை மாற்றிக்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்துவதாக எடுத்த முடிவு கைவிடப்பட்டது.
ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்த இடத்துக்குச் சென்ற போராளிகள் மாவீரர் குடும்ப நல காப்பகத்தின் தலைவர் தீபன் ஊடகங்களுக்கு இது தொடர்பாக தெரிவிக்கையில்,
மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தமது கட்சியின் ஆதிக்கத்தை பயன்படுத்தி இலங்கை தமிழ் அரசு கட்சியினர் நிர்வாகத்தினை தெரிவு செய்து வருகின்றனர். அந்த நிர்வாகத்தில் தமது கட்சியின் முக்கியஸ்தர்களை நியமிக்கின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இந்த தேவிபுர துயிலும் இல்லத்தினையும் தாவரவியல் பூங்கா எனும் கட்டமைப்புக்கு கொண்டுவர எண்ணுகின்றனர். அதற்கு ஒருபோதும் நாங்கள் சம்மதிக்கப் போவதில்லை.
இதேபோல போலியான செயற்பாடுகளை இனிமேல் முன்னெடுத்ததால் நாங்கள் வீதிக்கிறங்கி, தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.