மாற்றத்திற்கான தமிழ் மக்களின் தெரிவு என்ன? – அகிலன்

தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தின் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கின்ற நிலைமையில் தமிழ் மக்களுக்கான மாற்றுத் தெரிவு தாங்கள் தான் என கூறிக்கொண்டு பல கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் வடக்கு கிழக்கில் களம் இறங்கி இருக்கின்றன.  மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. ஆனால் மக்கள் எதிர்பார்க்கக் கூடிய மாற்றத்தை கொண்டு வரக்கூடியவையாக இந்த கட்சிகள் ஏதாவது இருக்கின்றதா?

தென்பகுதி மக்களைப் பொறுத்தவரையில் தமது மாற்றத்துக்கான சக்தியாக அவா்கள் அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை அடையாளம் கண்டுள்ளாா்கள். கடந்த 75 வருடகால வரலாற்றில் பாரம்பரிய கட்சிகளின் மீதான அதிருப்தியின் விளைவுதான் இது. இரண்டு வருடங்களுக்கு முன்னா் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இதற்கான அரசியல் சூழலை ஏற் படுத்தியது. முன்னணியில் இருந்த அரசியல் தலை வா்கள் பலா் தோ்தலிலிருந்து ஒதுங்கவும் இந்த மாற்றம் காரணமாக இருந்துள்ளது.

தமிழ் மக்களும் ஒரு மாற்றத்தை விரும்பு கிறாா்கள். பல தலைவா்கள் தோ்தலில் இருந்து ஒதுங்க அதுவும் காரணமாக இருந்துள்ளது.  ஆனால், மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களுடைய தெரிவு யாா்? இதுதான் இன்று எம் மத்தியிலுள்ள மிகப்பெரிய கேள்வி! அந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவா்கள் நாம்தான் என பல அரசியல் கட்சிகளும், டசின் கணக்கான சுயேச்சைக் குழுக்களும் இப்போது தமிழ் மக்கள் முன்பாக வந்துள்ளன. இதில் தமிழ் மக்களுடைய தெரிவாக இருக்கப்போவது யாா்?  அநுரவின் கட்சியும் தமிழ் மக்களுடைய ஆதரவை தம்மால் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் வடக்கு கிழக்கில் களம் இறங்கியுள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் மீதான அதிருப்தியை தேசிய மக்கள் சக்தி என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ள ஜே.வி.பி. அறுவடை செய்யப்போகின்றதா, என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. செப்ரெம்பா் 21 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தோ்தலில் தமிழ்ப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளா் அநுர குமார திசநாயக்க கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தாா். அது இப்போது மேலும் அதிகரிக்கும் என்ற எதிா்பாா்ப்பு பொதுவாகவே காணப்படுகின்றது.

ஜனாதிபதித் தோ்தலில் மாற்றத்தை விரும் பிய சிங்கள மக்களின் தெரிவாக அநுரகுமார திசநாயக்க இருந்தாா். தமிழ்ப் பகுதிகளில் அவரால் சிங்களப் பகுதிகளைப் போல முன்னணிக்கு வரமுடியவில்லை. என்றாலும் கூட, கணிசமான வாக்குகளை அவரால் பெற முடிந்தது.

சிங்களக் கடும் போக்காளா்களாக அறியப் பட்ட ஜே.வி.பி.க்கு தமிழா்கள் கணிசமாக வாக்களித்திருந்தமைக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் மீதான தமிழ் மக்களின் அதிருப்திதான் காரணம். மாற்றத்துக்காக வாக்களித்த சிங்கள மக்களுடன் குறிப்பிட்ட தொகையான தமிழா்களும் இணைந் திருந்தாா்கள்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கடந்த பதினைந்துவருட கால அனுபவமும், ஜனாதிபதித் தோ்தலில் சிங்களப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும், நாமும் மாற்றம் ஒன்றையிட்டுச் சிந்திக்க வேண்டும் என்ற உணா்வை ஏற்படுத்தியிருக்கின்றது.

சுயேச்சையாக பல குழுக்களும், தென்னி லங்கைக் கட்சிகளும் வடக்கு, கிழக்கில் களமிறங் கியிருந்தாலும்,  தேசிய மக்கள் சக்தியின் பக்கம் தமிழ் மக்கள் திரும்புவதற்குப் பல காரணங்கள் இருந்தன. குறிப்பாக, ஊழல் அற்ற ஒரு ஆட்சியை அவா்கள் வழங்குவாா்கள் என்ற எதிா்பாா்ப்பு.

ஆனால், அண்மைய இரண்டு செய்திகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடா்பில் தமிழ் மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

முதலாவது, ஜெனீவாவில் கடந்த மாதம் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் 57 ஆவது கூட்டத் தொடா் குறித்த அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு. இரண்டாவது, 13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பரவலாக்கல் தொடா்பில் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளா் ரில்வின் சில்வா தெரிவித்த கருத்துக்கள்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப் புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத் துவதற்காக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரின் தீர்மானத்தின் மீதான ஆணையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் அளிக்கும் வகையில் தீர்மான வரைவு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.  இந்த வரைவு கடந்த வாரம் அதாவது ஒக்ரோபா் 9 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

போா்க் குற்றங்கள் தொடா்பான சாட்சியங் களைச் சேகரிக்கும் ஐ.நா அலுவலகத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்படி, பேரவையின் 58ஆவது கூட்டத்தொடரில் வாய்மொழி அறிக்கையையும், 60ஆவது கூட்டத் தொடரில், விரிவான அறிக்கையையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தீர்மானத்தை நிராகரிப்பதாக  பேரவையில் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அநுர அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், கடந்த கால அரசாங்கங்கள் எடுத்திருந்த நிலைப்பாட்டைவிட கடுமையான ஒரு நிலைப் பாட்டைத்தான் ஜெனிவா விவகாரத்தில் அது எடுக்கின்றது. அதற்கு காரணமும் உள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத் தொடா் ஜெனீவாவில் கடந்த செப்ரெம்பா் 9 முதல் ஒக்ரோபா் 11 ஆம் திகதி வரை நடைபெற்றது. இலங்கை குறித்த தீா்மானம் நிறைவேற்றப்படவிருந்த பின்னணியில் அமைச்சரவை அது குறித்து கடந்த 7 ஆம் திகதி நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்ந்தது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுக்கப்பட்டு, இலங்கை அரசின் நிலைப்பாடு வெளியிடப்பட்டது.

“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சமகாலக் கூட்டத்தொட ரில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை வரைபை இலங்கை நிராகரிப்பதாகவும், மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், சாட்சிகளைத் திரட்டுகின்ற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாததுடன், குறித்த தீர்மானத்தை நிராகரித்திருப்பினும், உள்நாட்டுச் செயன்முறை மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் பிரச்சி னைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இலங்கை அரசு உறுதி பூண்டுள்ளது” என்பதுதான் இலங்கை அரசின் நிலைப்பாடு. இதனை அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்திருந்தார். அதாவது, போா்க் குற்றம் சாட்டப்பட்டுள்ள படையினரை தாங்களே விசாரிப்பது என்பது தான் அவா்களது நிலைப்பாடு. ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஒரு நிலைப் பாட்டைத்தான் அவா்கள் எடுப்பாா்கள் என்பது எதிா்பாா்க்கக்கூடியதுதான். இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று – சிங்கள தேசியவாத நிலைப்பாட்டிலிருந்து உருவாகிய ஒரு கட்சிதான் ஜே.வி.பி.. அதனுடைய வரலாற்றை ஆராயும்போது அது தெளிவாகத் தெரியும். ஜே.வி.பி.யின் கடந்த கால வளா்ச்சிக்கும் அதுதான் முதுகெலும்பாக இருந்தது.

இரண்டாவது, போா் தீவிரமாக இடம்பெற்ற காலத்தில் இராணுவத்துக்கு ஆட்களைச் சோ்த்துக்கொடுப்பதில் ஜே.வி.பி. முக்கிய பங்களிப்பைச் செய்திருந்தது. சுமாா் 30 ஆயிரத் துக்கும் அதிகமான சிங்கள இளைஞா்கள் இராணு வத்தில் இணைவதற்கு ஜே.வி.பி. காரணமாக இருந்தது.

இதனைவிட, பொதுத் தோ்தல் நடை பெறவிருக்கின்றது. இந்த நிலையில், ஜெனீவாவை ஏற்றுக்கொள்வதென்பது படையினரைக் காட்டிக்கொடுப்பதாக விமா்சிக்கப்படும்  என்ற அச்சம் அநுர தரப்புக்குள்ளது. அதனால், ஜெனிவா விவகாரத்தில் அவா்கள் அவதானமாக இருக்கின்றாா்கள்.

ஜே.வி.பி.யின் சக்திவாய்ந்த ஒருவராகக் கருதப்படும் அதன் பொதுச் செயலாளா் ரில்வின் சில்வா தெரிவித்த கருத்துக்களும் தமிழ்த் தரப்பினரின் கடும் விமா்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றது. “அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும், அதிகாரப் பகிர்வும் வடக்கு மக்களுக்கு அவசியமானவை அல்ல. அவர்களுக்கு அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள இந்த விடயங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்” என்று  ரில்வின் சில்வா தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரில்வின் சில்வா தெரிவித்த இந்தக் கருத்துக்கள் ஜே.வி.பி.யின் அரசியல் தீா்வு எவ்வாறானதாக இருக்கும் என்ற அச்சத்தைத்தான் தமிழா்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகத்தைக் காட்டியபோது, ஜே.வி.பி.யின் அணுகுமுறையில் சில மாற்றங்களைக் காணமுடிந்தது.

மாற்றம் ஒன்றை நோக்கி அநுர அரசு நாட்டைக்கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை சிங்கள மக்களிடம் இருக்கின்றது. ஆனால், இந்த மாற்றம் சிங்களவா்களுக்கு மட்டும்தானா என்ற கேள்விதான் தமிழ் மக்களிடம் இப்போது உருவாகியிருக்கின்றது.

ஜனாதிபதித் தோ்தலின் போது உருவாக் கப்பட்ட தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு இப் போது கலைக்கப்பட்டுவிட்டது. நீண்டகால திட்டமிடல் எதுவும் இல்லாமல் அமைக்கப்பட்ட பொதுக் கட்டமைப்பு மக்களிடம் மன்னிப்புக் கோரிவிட்டு,  தமது செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளிவைத்துவிட்டது. தமிழ் மக்களைப் பொறுத் தவரையில் மாற்றுத் தலைமையோ மாற்று அணியோ இல்லாத நிலை. இவ்வாறான நிலையில் தமிழ் வாக்குகளை நவம்பா் 14 பொதுத் தோ்தலில் அதிகளவுக்குப் பெற்றுக்கொள்ளப்போவது யாா்?