மாகாணங்களுக்கு முழுமையாக அதிகாரம் பகிரப்பட வேண்டும் : சிங்கள அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் முழுமையாகவும் முறையாகவும் பகிர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அதிகாரங்களை முறையாக பகிராமல் மாகாணசபைகள் வெள்ளை யானை என சித்தரிக்கப்படுவது முறையற்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
முன்னதாக வலது கையில் அதிகாரத்தை வழங்கி இடது கையில் பறிக்கும் நிலையே காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயநிர்ணயம் தோற்றம் பெறும் என்ற ஒரு தரப்பினர் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆகவே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரியுள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி சர்வக்கட்சித் தலைவர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் செல்வாக்கு பலவீனமடையும் என்பதற்காக மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். முன்னதாக, இனப் பிரச்சினைக்குத் தீர்வாகவே மாகாணசபை முறைமை அமுல்படுத்தப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.