டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களை மீண்டும் ஆபத்தை நோக்கித் தள்ளும் வகையிலன்றி, அவர்களைத் தேசிய நீரோட்டத்துக்குள் இணைக்கும் வகையில் மீள்கட்டுமானப்பணிகள் அமையவேண்டும் என மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது.
பேரழிவினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களின் காணி உரிமை, வீட்டுரிமையைப் பாதுகாக்கும் வகையில் கரிசனையுடைய சகல தரப்பினரையும் உள்ளடக்கிய பொது நடவடிக்கை செயலணி ஒன்றை உருவாக்கப்படவேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து மலையக மக்களின் பிரச்சினைகள் சார்ந்து இயங்கிவரும் மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகளுக்கு அமைய, ‘டித்வா’ அடுத்து தற்காலிக முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களில் 99 சதவீதமானோர் மத்திய மலைநாட்டின் 5 மாவட்டங்களில் உள்ளனர். அதேபோன்று இடம்பெயர்ந்து தற்காலிகமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்பவர்களில் 95 சதவீதமானோர் குறித்த 5 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இவ்வாறு இடம்பெயர்ந்தோரில் மீண்டும் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல முடியாதவர்களில் மிக அதிகமானோர் தோட்டங்களில் வாழும் மலையகத்தைச் சேர்ந்த குடும்பங்களாவர். அனர்த்தத்தின் பின்னர் நாடு முன்நோக்கிப் பயணிப்பதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் துரிதமாக இடம்பெற்றுவருகிறது. ஆனால் அனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் இதில் பெருமளவுக்கு உள்வாங்கப்படவில்லை. இவ்விடயத்தில் ஜனாதிபதியும் அரசாங்கமும் உன்னிப்பாகக் கவனம் செலுத்தி செயலாற்ற வேண்டும்.
இயற்கை அனர்த்தங்கள் தவிர்க்க முடியாதவையாக இருக்கலாம். ஆனால் அதன் தாக்கங்கள் மற்றும் விளைவுகளால் ஏற்படும் அவலங்கள் அனர்த்தத்துக்கு முன்னரான சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் கட்டமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்டவை என்பதையே அனர்த்தம் பற்றிய கற்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே இப்பேரழிவு மலையகத்தில் வாழும் விளிம்பு நிலையிலுள்ள மக்களை மிகமோசமாகப் பாதித்திருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.
இருப்பினும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் திட்டங்களைப் பெறுவதிலும், இப்பேரழிவிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதிலும் மலையகத் தமிழ்மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்துள்ளனர்.
அரசாங்கம் இச்சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்காமை, அரசாங்கத்தின் உயர்மட்ட கொள்கை வழிகாட்டல்களில் உள்ள குறைபாடுகள், மலையகத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்க அதிகாரிகளுக்குப் போதிய அனுபவம் இன்மை, அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் அவர்களது காணி உரிமை குறித்த தெளிவின்மை போன்றன அதற்கான முக்கிய காரணங்களாகும். இங்கு அரசாங்கத்தின் கவனக்குறைவானது மலையகத்தில் நிவாரணம் மற்றும் மீளக்கட்டியெழுப்பல் பணிகளுக்குப் பாரிய இடையூறாக உருவெடுத்துள்ளது.
அத்தோடு காணிகளை அடையாளம் காணும் செயன்முறை மற்றும் நிவாரணம் வழங்குவதற்கான தகுதி போன்ற கொள்கைகளில் நிலவும் தெளிவின்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இன்மை என்பன தோட்டப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மத்தியில் கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.
மேலும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மலையக மக்களின் காணி உரிமை மற்றும் வீட்டு உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில், இதுபற்றிய கரிசனையுடைய சகல தரப்பினரையும் உள்ளடக்கிய பொது நடவடிக்கை செயலணி ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அக்கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



