இலங்கைத் தீவின் பொருளாதாரத்தில் முக்கிய பங் காற்றுபவர்களாக இருக்கின்ற மலையகப் பெருந்தோட்ட சமூகம், கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாரிய போராட்டங்களுக்கு மத்தியிலேயே தமது இருப்பைத் தக்கவைத்துள்ளது. அண்மையில் சிங்கள நாளிதழ் ஒன்றில் “கொழும்பில் கொத்து ரொட்டி அடிப்பவர்கள் அனைவரும் மலையகத்தவர்கள்” என்ற தொனியில் வெளியான செய்தி, ஒரு இனத்தின் உழைப்பை ஏளனம் செய்வதாகவும், அவர்களின் பொருளாதார இயலாமையைச் சுட்டிக்காட்டி சிறுமைப்படுத்துவதாகவும் அமைந்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் உள்ள உணவங்களில் கடின உழைப்பை நல்கும் இளைஞர்களில் பெரும்பாலானோர் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எதார்த்தமான உண்மை. ஆனால், இதை ஒரு “அடையாளமாகவோ” அல்லது “தாழ்நிலைத் தொழிலாகவோ” சித்தரிக்க முற்படுவதில்தான் சிக்கல் உள்ளது. குறித்த நாளிதழ் செய்தி, மலையக இளைஞர்கள் கல்வியறிவின்மையாலோ அல்லது வேறு வழியின்றியோ இத்தொழிலுக்கு வரு வதாக மறைமுகமாகச் சித்திரித்தது. இது சமூக வலைத் தளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டது. இதேபோன்ற கருத்துக்கள் கடந்த காலங்க ளில் தென்னிலங்கை அரசியல்வாதிகளாலும், சில உயர் வர்க்கத்தினராலும் முன்வைக்கப்பட்டன. “மலையக மக்கள் தோட்டங்களுக்குள்ளேயே இருக்க வேண்டும்” என்ற மறைமுக ஆதிக்கப் போக்கு இதன் பின்னால் உள்ளது.
குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ஊடக செயற்பாட்டாளரான சேபால அமரசிங்க தனது வலையொளி (YouTube) பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு, “கொழும்பில் உள்ள ஹோட்டல்களில் கொத்து ரொட்டி அடிப்பவர்கள் அனைவரும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள்” என்ற ரீதியிலும், மலையக மக்களின் பின்னணி மற்றும் அவர்களின் தொழில் சார்ந்து அவமதிக்கும் வகையிலும் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதற்கு மலையக அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் தமது கருத்துக்கு மன்னிப்பு கோரி சேபால அமரசிங்க காணொளி ஒன்றை வெளியிட்டார். அதேபோன்று கடந்த 2024ஆம் ஆண்டு தற்போது அமைச்சராக உள்ள கே.டி.லால் காந்தவும் இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டதுடன் அதுவும் பேசுபொருளானது. மலையக இளைஞர்கள் தோட்டங்களை விட்டு வெளியேறி நகரங்களுக்கு வேலைக்குச் செல்வதை, பெருந்தோட்ட நிறுவனங்கள் ஒரு நஷ்டமாகவே பார்க்கின்றன. ஏனெ னில், மலிவு உழைப்பு கையை விட்டுப் போவதை அவர்கள் விரும்புவதில்லை. எனவேதான், இத்தகைய ஊடகப் பிரச்சாரங்கள் மூலம் அந்த இளைஞர்களின் கௌரவம் சீண்டப்படுகிறது. தற்போது இந்த விடயம் பேசுபொருளாக மாறியதில் அண்மையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டமை முக்கிய காரணமாக அமைகிறது.
அண்மைய சம்பள உயர்வு: ஓர் அரசியல் நாடகம்?
நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளம் 1750 ரூபாயாக சில நிபந்தனைகளுடன் அதிகரிக்கப்பட்டது. ஆனால், இந்த சம்பள உயர்வின் பின்னணியில் கசப்பான உண்மைகள் பல உள்ளன. 1750 ரூபாய் என்பது முழுமையான அடிப்படைச் சம்பளம் அல்ல. இதில் அடிப்படைச் சம்பளம், வரவுச் சலுகை மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் அடங்கும். நாட்டின் தற்போதைய பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது, இந்த உயர்வு போதுமானதாக இல்லை.
சம்பளத்தை உயர்த்திய தோட்ட நிறுவனங்கள், அதற்கு ஈடாக நாளாந்தம் பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை அதிகரித்துள்ளதாக மலையக தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. தேயிலை கொழுந்து விளைச்சல் அதிகமாக உள்ள காலப்பகுதியில் இது சாத்தியமான ஒன்றாக இருந்தாலும் விளைச்சல் குறைவாக இருக்கின்ற காலப்பகுதியில் இது மிகவும் சவாலான ஒரு விடயமாக மாறுகிறது.
அதேநேரம் இந்தச் சம்பள உயர்வு குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களும் முக்கிய விமர்சனங்களை முன்வைக்கின்றனர். பல நிறுவனங்கள் 1700 ரூபாய் என்ற சம்பள உயர்வை வழங்க மறுத்ததுடன், நீதிமன்றம் வரை சென்று முட்டுக்கட்டை போட்டன. இந்த பின்னணியில் தற்போதைய சம்பளம் உயர்த்தப்பட்ட பிறகு, பல தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வேலை நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மாத இறுதியில் அவர்கள் கையில் கிடைக்கும் மொத்தத் தொகை பழைய அளவிலேயே உள்ளது என்ற விமர்சனங்கள் உள்ளன.
முறையான ஓய்வூதியத் திட்டங்களோ அல்லது மருத்துவக் காப்பீடுகளோ இன்றி, வெறும் நாளாந்தக் கூலியை உயர்த்துவது நிரந்தரத் தீர்வாகாது. இந்த விமர் சனங்களுக்கு மத்தியில் ஹோட்டல் தொழில் குறித்து சிங்கள ஊடகம் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. மலையக இளைஞர்கள் ஹோட்டல் வேலைகளுக்குச் செல்வதை நாம் ஊக்குவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அங்குள்ள பொருளாதார எதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் இளைஞனுக்கு நாளாந்தம் குறைந்தது 2500/- ரூபாய் வேதனமாகக் கிடைக்கிறது. அதோடு, தங்குமிடம் மற்றும் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. மறுபுறம், அண்மையில் அதிகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சம்பளத்தில் வெறும் 400/- ரூபாய் மட்டுமே கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதிலும் 200/- ரூபாய் தற்காலிகமான ஒரு கொடுப்பனவு மட்டுமே. வெறும் 400 ரூபாய்க்காக ஒரு இளைஞன் தனது சுதந்திரமான நகர வேலைவாய்ப்பையும், அதிக வருமானத்தையும் விட்டுவிட்டு, மீண்டும் தோட்டத்தின் கங்காணிகளிடமும், லயத்துத் துயரங்களோடும் வாழத் திரும்புவான் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்ற ஒன்றாகும். மறுபுறம் சம்பள உயர்வின் தாக்கம் மலையக அரசியலிலும் பதிவாகியுள்ளது. மலையக அரசியல் வரலாற்றில் தற்போதைய காலம் ஒரு இருண்ட காலமாகக் கருதப்படுகிறது.
கடந்த காலங்களில் மலையகத் தலைமைகளை திறமையற்றவர்கள் என்று விமர்சித்திருக்கிறோம். ஆனால், அவர்கள் மீது ஒரு தார்மீகக் குற்றச்சாட்டு இருந்தா லும், அவர்கள் தமது கட்சியை வளர்ப்பதிலாவது அல்லது ஒரு குறைந்தபட்ச பேரம் பேசும் சக்தியையாவது வைத்திருப்ப தில் திறமையாக இருந்தார்கள். ஆனால் தற்போதைய தலைமைகளிடம் தீர்க்கமான கொள்கைகள் இல்லை. அரசாங்கத்திடம் பேரம் பேசும் வல்லமை இல்லை.
தொழிலாளர்களின் உரிமைகளை விட, தமது பதவிகளைத் தக்கவைப்பதிலேயே குறியாக உள்ளனர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இந்தத் தலைமைத்துவ வெற்றிடம், எதிர்காலத்தில் மலையக சமூகத்தை இன்னும் மோசமான பொருளாதாரப் பள்ளத்தில் தள்ளக்கூடும் என்பது கசப்பான உண்மை. மலையக மக்கள் “கொத்து ரொட்டி அடிப்பவர்கள்” என எள்ளி நகையாடுபவர்கள், அந்த உழைப்பின் பின்னால் உள்ள வியர்வையையும், கண்ணீரையும் உணர்வதில்லை. தோட்டங்களில் நிலவும் அடிமைத்தனமான சூழலிலிருந்து வெளியேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு, அங்கேயே இருக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பது அநீதியானது.
முறையான நில உரிமை, கௌரவமான சம்பளம் மற்றும் அரசியல் உறுதிப்பாடு கிடைக்கும் வரை, மலையக இளைஞர்களின் இடப்பெயர்வு தொடரவே செய்யும். காலம் செல்லச் செல்ல, தற்போதுள்ள தலைமைகளின் இயலாமையும், திட்டமிடப்படாத சம்பள உயர்வுகளின் தோல்வியும் இன்னும் வெளிப்படையாகத் தெரியவரும்.



