மலையக தமிழ் மக்களை எண்ணி கவலையடைந்தால் மாத்திரம் போதாது. அவர்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வினை வழங்க வேண்டியது அவசியமாகும். இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு வழங்கப்படாமை குறித்து கொள்கை வகுப்பாளர்கள் என்ற ரீதியில் வெட்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பு – லியோனல் வென்ட் அரங்கில் மலையக இளைஞர், யுவதிகளால் ”20010 ஆர்ப்பாட்டத்துக்கு அப்பால்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மலையக தமிழ் இளைஞர், யுவதிகள் இணைந்து இந்த தனித்துவமான கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கின்றனர். எமது நாட்டில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் மிக முக்கியத்துவமான விடயங்களை அவர்கள் இந்த புகைப்படங்கள் ஊடாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
அவை மிகவும் கவலையளிப்பவையாகவுள்ளன. கவலையடைவது மாத்திரம் போதுமானதல்ல. மலைய மக்களின் பிரச்சினைகளுக்கு ஸ்திரமான தீர்வொன்றை வழங்க வேண்டியது எமது கடமையும், பொறுப்புமாகும். மலையக மக்கள் குறிப்பாக தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர். ஆனால் அவர்களது உழைப்பிற்கு சமமான வாழ்வாதாரமோ வாழக்கை தர உயர்வோ அவர்களுக்கு கிடைக்கப் பெறவில்லை.
கொள்கை வகுப்பாளர்கள் என்ற ரீதியில் அவை தொடர்பில் நாம் வெட்கப்பட வேண்டும். அதற்காக நாம் எமது கவலையை வெளிப்படுத்துகின்றோம். 200 ஆண்டுகள் என்ற நீண்ட வரலாற்றுக்குள் எமது நாட்டுக்கு பாரியளவில் அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுத்த மலைய சமூகத்துக்கு, நாம் ஆற்றியுள்ள வரையறுக்கப்பட்ட சேவை தொடர்பில் எந்த வகையிலும் எம்மால் மகிழ்ச்சியடைவோ, திருப்தியடையவோ முடியாது.
நானும் தனிப்பட்ட ரீதியில் அதற்கு பொறுப்பு கூற வேண்டும். எவ்வாறிருப்பினும் இவ்வாறான புகைப்படக் கண்காட்சிகள் ஊடாக பாடங்களைக் கற்றுக் கொண்டு களத்தில் நடைமுறை சாத்தியமான மலையக மக்களுக்கு உயர் வாழ்க்கை தரத்தை வழங்கக் கூடிய புதிய கொள்கைக்கான வேலைத்திட்டத்தின் அவசியத்தை நாம் இந்த சந்தர்ப்பத்தில் ஏற்றுக் கொள்கின்றோம்.
தேயிலை தொழிற்துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்ற மலைய மக்களின் வாழ்க்கையும், அவர்கள் எதிர்கொள்ளும் துயரமும் இந்த கண்காட்சியில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேயிலை ஏற்றுமதியூடாக பல மில்லியன், பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு வருமானம் கிடைக்கப் பெற்றாலும், அதற்கு வழிவகுக்கும் மக்களின் வாழ்க்கை தரம் கீழ் மட்டத்திலேயே காணப்படுகிறது. எனவே அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.