மலையகப் பகுதிகளில் மாணவர் இடைவிலகல் எதிர்கால கல்வியில் சவால் : மருதன் ராம்

இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள், கல்வித்துறையில் நீண்டகாலமாகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மாணவர் இடைவிலகல் என்பது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இதில் ஆரம்பம் தொட்டு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு வரையான தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் கொள்கை கற் கைகள் ஆய்வு நிறுவனம் (Institute of Policy Studies of Sri Lanka) வெளியிட்டுள்ள தகவல்கள் மற்றும் அண்மையில் மலையகத்தைத் தாக்கிய ‘டிட்வா’ புயலின் கோரத்தாண்டவம் என்பன மலையகக் கல்வியின் அடித்தளத்தை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. மாணவர் இடைவிலகல் என்பது வெறும் புள்ளிவிபரம் மட்டுமல்ல. அது ஒரு சமூகத்தின் எதிர்காலக் கனவுகள் சிதைக்கப்படுவதன் அடையாளமாகும். தற்போதைய அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் இத்தகைய சூழலில் எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும்.
2022ஆம் ஆண்டு வரையான தரவுகளின்படி, மலையகப் பகுதிகளில் பாடசாலை மாணவர் இடைவிலகல் விகிதம் தேசிய மட்டத்தை விட மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக, தோட்டப்புறங்களில் ஆரம்பக் கல்வியை விட இடைநிலைக் கல்வியில் மாணவர்கள் அதிகளவில் விலகிச் செல்கின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் அடிப் படையாக அமைகின்றன. அதன்படி, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. இதனால் பிள்ளைகளின் கல்விச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல், அவர்களைக் கூலி வேலைகளுக்கு குறிப்பாக கொழும்பு போன்ற நகரங்களில் உணவகங்கள் மற்றும் வீடுகளில் வேலைக்கு அனுப்பும் நிலை தொடர்கிறது.
பெரும்பாலான தோட்டப்புற பாடசா லைகள் ‘வகை 3’ என்ற கட்டமைப்புக்குள் காணப்படும் பாடசாலைகளாகும். இங்கு கற்கும் மாணவர்களுக்கு உயர்தர வகுப்புகளுக்கு செல்வதற்கு அருகிலுள்ள நகரங்களுக்குப் பயணம் செய்ய வேண்டியுள்ளது. போக்குவரத்துச் செலவு மற்றும் தூரம் காரணமாகப் பல மாணவர்கள் இடைவிலகுகின்றனர்.
டிட்வா புயலும் மலையகக் கல்வியில் ஏற்பட்ட பாரிய தாக்கமும்
இந்த பின்னணியில் 2025ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ புயல், மலையகத்தின் கல்விச் சூழலை நிலைகுலையச் செய்துள்ளது. இது மாணவர் இடைவிலகலைத் துரிதப்படுத்தும் ஒரு காரணியாக மாறியுள்ளது. நுவரெலியா, பதுளை, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் பாதிக்கப்பட்டுள்ளன.
உலக வங்கி மற்றும் யுனிசெப் அறிக்கைகளின்படி, மத்திய மாகாணத்தில் மட்டும் கல்விசார் உட்கட்டமைப்பு களுக்குப் பல மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. புயல் மற்றும் வெள்ளத்தினால் ஏழை மாணவர்களின் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் அழிந்துள்ளன. மீண்டும் இவற்றை வாங்கும் சக்தி இல்லாத பெற்றோர், பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பத் தயங்குகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்குப் பாடசாலைகள் இடைக்காலத் தங்கு மிடங்களாகப் பயன்படுத்தப்பட்டதால், கல்வி நடவடிக்கைகள் நீண்டகாலம் தடைப்பட்டன.
இக்காலப்பகுதியில் மாணவர்கள் கல்வியிலிருந்து அந்நியப்பட்டு, மீண்டும் பாடசாலைக்குத் திரும்புவதில் ஆர்வம் காட்டாத நிலை ஏற்பட்டுள்ளது. இவை இயற்கை மற்றும் பொதுவான காரணிகளாக இருக்கின்ற போதிலும் மாணவர் இடைவிலகலுக்கான ஆழமான காரணங்களும் உள்ளன.
மலையகத்தில் இடைவிலகல் என்பது ஒரு சங்கிலித்தொடர் போன்றது. பெற்றோரின் விழிப்புணர்வு இன்மை ஒரு முக்கிய பிரச்சினையாக காணப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளை விடவும் தற்போது பெற்றோர் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள போதிலும் ஒப்பீட்டு அளவில் அது குறைவாகவே காணப்படுகிறது. கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு குறைந்த சமூகச் சூழல் மற்றும் மதுப்பழக்கம் போன்ற சமூகச் சீரழிவுகள் மாணவர்களின் கற்றல் சூழலைப் பாதிக்கின்றன.
மறுபுறம் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் போன்ற பிரதான பாடங்களுக்கு மலையகப் பாடசாலைகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமை மாணவர்களிடையே விரக்தியை ஏற்படுத்துகிறது. தற்போதைய பொருளாதாரச் சூழலில் சரிவிகித உணவு கிடைக்காததால், மாணவர்கள் உடல் ரீதியாகப் பலவீனமடைந்து பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர்.
இந்தநிலையில் தற்போதைய அரசாங்கம் அறிமுகப் படுத்தியுள்ள ‘தேசிய கல்வி கொள்கை கட்ட மைப்பு 2023-2033’ மலையக மாணவர்களின் கல்விப் பிரச்சி னைகளுக்குச் சில தீர்வுகளை முன்வைக்கின்ற போதிலும் தேசிய ரீதியில் விமர்சனத்தையும் எதிர் கொண்டுள்ளது. புதிய சீர்திருத்தங்களின்படி, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களைத் தெரிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது பாடத்திட்டத்தின் சுமை யைக் குறைத்து, மாணவர்கள் இடைவிலகுவதைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாடசாலைப் பருவத்திலேயே தொழில்சார் பயிற்சிகளை வழங்குவதன் மூலம், கல்வியைப் பாதியில் நிறுத்தும் மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு தொழில் தகுதியையாவது பெறுவதை அரசு உறுதி செய்கிறது. இது மலையக இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். வகுப்பறைக்கு 25-30 மாணவர்கள் என்ற வரம்பு மற்றும் செயற்பாடு சார்ந்த கற்றல் முறைகள் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமையும்.
பௌதிகக் கட்டடங்கள் சேதமடைந்தாலும் கற்றல் செயற்பாட்டை தடையின்றித் தொடர, டிஜிட்டல் தொழில் நுட்பத்தை மலையகப் பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்த புதிய கொள்கை முன்னுரிமை அளிக்கிறது. எவ்வாறாயினும் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசா லைகளை மூடும் அல்லது ஒன்றாக்கும் திட்டம் மலையகப் பெருந்தோட்ட பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சமூக பொருளாதார சூழல் காரணமாக தங்க ளின் அருகில் உள்ள பாடசாலையில் இருந்து இடைவில கும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய மட்டத்தில் உருவாக்கப்படும் கல்விக் கொள்கையில் மலையகப் பகுதிகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது. எனவே, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது கற்றல் உபகரணங்களைப் பாதுகாப்பது மற்றும் அனர்த்தங்களுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய பாடசாலைக் கட்டடங்களை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அத்துடன்  மலையகப் பாடசாலைகளுக்குத் தகுதியான ஆசிரியர்களை நியமிப்பதற்கும், அவர்கள் அங்கேயே தங்கிப் பணியாற்றுவதற்கும் வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.
மலையக மாணவர்களின் கல்வி இடைவிலகல் என்பது ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகும். பொரு ளாதார நெருக்கடி, டிட்வா புயல் போன்ற இயற்கை அனர்த் தங்கள் இப்பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள் ளன.
இருப்பினும், அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் உரிய திருத்தங்களுடன் முறையாக நடை முறைப்படுத்தப்பட்டால், கல்வி முறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். டிஜிட்டல் தொழில்நுட்பம், தொழில்சார் கல்வி மற்றும் சமமான வளப்பகிர்வு ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்ட புதிய கொள்கைகள் மலையகப் பிள்ளைகளின் கைகளுக்கு கல்வி மீதான ஆர்வத்தை கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு சமூகத்தின் முன்னேற்றம் அதன் பிள்ளைகளின் கல்வியிலேயே தங்கியுள்ளது என்பதை உணர்ந்து, மலையகக் கல்வியை மீளக்கட்டியெழுப்புவது ஒட்டுமொத்த தேசத்தினதும் பொறுப்பாகும்.