இலங்கையின் மலையகச் சமூகம் இருநூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. இந்த வரலாற்றில் ‘தொண்ட மான்’ என்ற பெயர் அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. சௌமியமூர்த்தி தொண்டமான் முதல் தற்போதைய ஜீவன் தொண்டமான் வரை ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மலையகப் பிராந்தியத்தில் நீடித்து வருகிறது.
இதன் ஒரு வெளிப்பாடாகவே மலையகத்தில் உள்ள பல அரச நிறுவனங்கள், கலாசார நிலையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்குத் தொண்டமானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த பல அரசாங்கங்களில் அங்கம் வகித்த இலங்கை தொழி லாளர் காங்கிரஸ் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான அரச நிறுவனங்களுக்கு தொண்டமானின் பெயரை வைத்துள் ளது. இந்தநிலையில் அண்மையில் பதவியேற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர், குறித்த பெயர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்தமை பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைக்கப்பட்ட பின் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில், மலையக பிரதிநிதித்துவம் மற்றும் அரச சொத்துக்கள் தொடர்பான விவாதத்தின் போது இந்த பெயர் மாற்ற விவகாரம் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் குறிப்பாக மலையகப் பகுதியைச் சேர்ந்த கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்கள் முக்கிய பேசுபொருளாக மாறி உள்ளன.
இதன்படி அரச நிறுவனங்கள் என்பது பொதுமக்க ளின் வரிப்பணத்தில் இயங்குபவை. அவற்றிற்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் குடும்பத்தின் பெயரைச் சூட்டு வது, அந்த நிறுவனத்தை ஒரு தனியார் சொத்தாக மக்கள் மத்தியில் சித்தரிக்கிறது. இது ஜனநாயக பண்புகளுக்கு எதிரானது. என்ற கருத்தை அவர்கள் முன்வைத்தனர்.
அத்துடன் மலையகப் போராட்ட வரலாற்றில் சௌமியமூர்த்தி தொண்டமானைத் தவிர கே. நடேசையர், சி.வி. வேலுப்பிள்ளை போன்ற பல தியாகிகள் உள்ளனர்.
அவர்களின் பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன என்பதையும் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எடுத்து ரைத்துள்ளனர். 76 ஆண்டுகால பாரம்பரிய அரசியலில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்பதே மக்க ளின் ஆணை. எனவே, பழைய அரசியல் “பிரபுத்துவ” அடையாளங்களை நீக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் மலையக மக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வலியுறுத்தலுக்கு மலையகத்தின் முக்கிய அரசியல் கட்சியும் தொழிற்சங்கமான இலங்கைத் தொழி லாளர் காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரை யாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்ட மான் தமது முழுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.
பாராளுமன்றத்துக்கு வெளியே கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தங்களின் எதிர்ப்பை வெளியிட்டதுடன் பல இடங்களில் பெருந்தோட்ட மலையக தொழிலாளர்களின் ஊடாக போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜீவன் தொண்டமான், “இன்று எங்களை விமர்சிக்கும் பலர் பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பதற்குக் காரணமே சௌமியமூர்த்தி தொண்ட மான் பெற்றுக்கொடுத்த பிரஜாவுரிமைதான்” என சுட்டிக் காட்டினார்.
அத்துடன் தென்னிலங்கையில் பண்டாரநாயக்க, ஜே.ஆர். ஜயவர்தன, காமினி திசாநாயக்க ஆகியோரின் பெயர்களில் உள்ள நிறுவனங்களை மாற்றாதவர்கள், ஏன் மலையகத் தலைவரின் பெயரை மட்டும் குறிவைக்கிறார்கள் என்ற கேள்வியை அவர் எழுப்பினர்.
இது வெறும் பெயர் மாற்றம் அல்ல, மலையக மக்களின் வரலாற்றுத் தடம் மற்றும் அடையாளத்தை அழிக்கும் முயற்சி என ஆளும் தரப்பை ஜீவன் தொண்டமான் விமர்சித்தார். இந்த அடிப்படையில் முக்கிய பேசு பொருளாக மாறி உள்ள தொண்டமான் பெயரில் உள்ள முக்கிய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதன்படி, மலையகத்தில் தொண்டமானின் பெயரில் பல முக்கிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
அந்த வரிசையில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் மலையக மக்களின் கலை, கலாசார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனம். இது மலையக மக்களின் கலாசார மற்றும் பண்பாட்டு ரீதியான வளர்ச்சியை நோக்காக கொண்டு உருவாக்கப்பட்டது.
இது அரசாங்கத்தின் நேரடி நிதி ஒதுக்கீட்டில் இயங்கினாலும், இதன் நிர்வாகக் குழுவில் பெரும்பாலும் இ.தொ.கா சார்ந்தவர்களே நியமிக்கப்படுவதாகக் குற்றச் சாட்டு உள்ளது. அதேபோன்று ஹட்டனில் இயங்கும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம். மலையக இளைஞர்களுக்குத் தொழில்சார் கல்வியை வழங்குவதற் காக இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இது ஆரம் பிக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தில் கணினித் துறை, மின்சாரத் துறை மற்றும் தொழிநுட்பக் கல்விக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதுவும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் இயங்குகின்ற போதிலும் இதன் பெயரைக் காரணம் காட்டி, குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி தனது அரசியல் தேவைகளுக்கு மாணவர்களையும் வளங்களை யும் பயன்படுத்துவதாக மாற்றுக் கட்சிகள் விமர்சிக்கின்றன.
அதேநேரம் பல தோட்டங்களில் தொண்டமான் கலாசார மத்திய நிலையங்கள் இயங்குகின்றன. தோட்டப் புறங்களில் சிறுவர் கல்வி மற்றும் கலை நிகழ்வுகளுக்காக இவை அமைக்கப்பட்டன. எனினும் பல நிலையங்கள் முறையான பராமரிப்பின்றி உள்ளதாகவும், தேர்தல் காலங்களில் இவை இலங்கை தொழிலாளர் காங்கிர ஸின் பிரசாரக் காரியாலயங்களாக மாறுவதாகவும் குற்றச் சாட்டு கள் உள்ளன.
பெயர் மாற்றும் கோரிக்கையின் பின்னணியிலுள்ள விமர்சனங்கள்
பெயர் மாற்றத்தை ஆதரிப்பவர்கள் சில பிரதான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஒரு அரச நிறுவனத்திற்கு ஒருவரின் பெயரை வைப்பதன் மூலம், அந்தச் சமூகம் குறிப்பிட்ட அந்தக் குடும்பத்திற்கு அடிபணிந்திருக்க வேண்டும் என்ற உளவியல் ரீதியான தாக்கம் ஏற்படுத்தப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர் ‘தொண்டமான்’ என்று இருக்கும்போது, சாதாரண தொழிலாளர்கள் அந்த நிறுவனம் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு சொந்தமானது எனக் கருதி, அரசாங்கத்தின் ஏனைய சலுகைகளை அணுகத் தயங்குகின்றனர்.
மலையகத்தில் புதிய அரசியல் சக்திகள் உருவாகும்போது, பழைய அடையாளங்களை அகற்றுவது அவர்களின் அரசியல் வளர்ச்சிக்குத் தேவையாக இருக் கிறது போன்ற விமர்சனங்களை அவர்கள் முன்வைக் கின்றனர். இந்த விவகாரம் வெறும் பெயர் மாற்றத்துடன் முடிந்துவிடுவதல்ல. இது மலையகத்தின் எதிர்கால அரசியல் திசையைத் தீர்மானிப்பதாகும்.
பெயரை விடச் சேவையே முக்கியம்
நிறுவனங்களின் பெயரை மாற்றுவதால் மட்டும் மக்களின் வறுமை தீர்ந்துவிடாது. அந்நிறுவனங்கள் எவ்வளவு தூரம் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குகின்றன என்பதே முக்கியம். நிறுவனங்களின் பெயர்களை மாற்றினாலும், மாற்றாவிட்டாலும் அவை பாரபட்சமின்றி அனைத்து அரசியல் சார்புள்ள மக்களுக்கும் சேவை செய்வதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
மறுபுறம் ஒரு தலைவரின் பிழையான அரசியலை விமர்சிக்கலாம், ஆனால் அவர் செய்த நன்மைகளை வரலாற்றில் இருந்து துடைத்தெறிவது ஒரு சமூகத்தின் வேர்களை அறுப்பதற்குச் சமமாகும். மலையகத்தில் தொண்டமான் பெயரில் உள்ள நிறுவனங்களை மாற்று வது தொடர்பான விவாதம் என்பது இலங்கையின் அரசியல் மாற்றத்தின் ஒரு அங்கமாகும்.
தேசிய மக்கள் சக்தி முன்வைக்கும் “புதிய அரசியல் கலாசாரம்” மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைக்கும் “வரலாற்று அங்கீகாரம்” ஆகியவற்றுக்கு இடையிலான இந்தப் போராட்டம் தொடர்கிறது.பெயர்களில் மாற்றம் கொண்டுவருவதை விட, மலையக மக்களின் அடிப்படைத் தேவையான காணி உரிமை, முறையான கல்வி மற்றும் கௌரவமான வேதனம் அல்லது தேயிலைத் தொழிலில் முறைமை மாற்றம் ஆகியவற்றை உறுதிப் படுத்துவதே அரசாங்கத்தின் முதல் கடமையாக இருக்க வேண்டும். அரசியல் தலைவர்களின் பெயர்கள் வரலாற்றில் இருக்க வேண்டுமா அல்லது கட்டடங்களில் இருக்க வேண்டுமா என்பதை காலமும் மக்களுமே தீர்மானிக்க வேண்டும்.



