மலையகக் கல்விப் பாதையில் இயற்கை அனர்த்தங்களும் கொள்கை முரண்பாடுகளும்: ஓர் அபாய எச்சரிக்கை: மருதன் ராம்

இலங்கையின் மலையகச் சமூகம் இரண்டு நூற்றா ண்டுக்கும் மேலாகத் தனது இருப்பிற்காகவும் உரி மைகளுக்காகவும் போராடி வருகிறது. அந்தப் போராட் டத்தின் மிக முக்கியமான ஆயுதம் ‘கல்வி’. ஆனால் இன்று, அந்த ஆயுதம் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் திட்ட மிடப்பட்ட கொள்கை மாற்றங்கள் எனும் இருமுனைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்தநிலையில் மலையகக் கல்வி அடைந்துள்ள முன்னேற்றங்கள், எதிர்கொள்ளும் வீழ்ச்சிகள் மற்றும் முன்வைக்கப்பட வேண்டிய அரசியல் கோரிக்கைகள் குறித்து ஆழமாக நோக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதன்படி, இலங்கையின் மலையகப் பாடசாலைக் கல்வி இன்று ஒரு பாரிய நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளது. ஒருபுறம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மண்சரிவு மற்றும் இயற்கை அனர்த்தங்கள் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைய, மறுபுறம் அனர்த்தங்களைச் சாட்டி பாடசாலைகளை மூடும் அல்லது இணைக்கும் அரசாங்கத்தின் மறைமுகக் கொள்கைகள் மாணவர்களின் கல்வி உரிமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.
கடந்த சில தசாப்தங்களாகத் தோட்டத் தொழி லாளர்களின் பிள்ளைகள் மத்தியில் உயர்கல்வி மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து இன்று மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உருவாகி வருகின்றனர். ஆரம்பத்தில் ‘லயன்’ அறைகளில் இயங் கிய பல பாடசாலைகள், இன்று ஓரளவு கட்டடம் மற்றும் ஆய்வுகூட வசதிகளைப் பெற்றுள்ளன. இந்த பின்னணி யில் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் மலையக பாடசாலைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. அனர்த்தம் சார்ந்த அறிக் கைகளுக்கும் கள யதார்த்தத்துக்கும் இடையே பாரிய முரண்பாடு நிலவுகிறது.
சமீபத்தில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்ட அறிக்கையில், மத்திய மாகாணத்தில் அனர்த்தங்கள் காரணமாக எந்தவொரு பாடசாலையையும் இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கல்வி அமைச்சின் தரவுகள் முற்றிலும் மாறுபட்ட ஒரு சித்திரத்தை வழங்கு கின்றன. இதன்படி, மத்திய மாகாணத்தில் மட்டும் 47 பெருந்தோட்டப் பாடசாலைகள் மண்சரிவு அபாயத் தைக் கொண்டுள்ளன. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக 50 தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் தற்போதும் அபாயப் பட்டியலில் உள்ளன என்று அரசாங்கம் கூறுகிறது. அதிகாரிகளும் நிபுணர்களும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்யாமல் இவ்வாறான தகவல்களுடன் அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கள ஆய்வின்றி மேலோட்டமான அறிக்கைகளை வெளியிடுவது பிள்ளைகளின் உயிரோடு விளையாடும் செயலாகும் என்று ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சியும் பாடசாலைகள் மூடப்படும் அபாயமும்
அரசாங்கத்தின் புதிய கல்வி மறுசீரமைப்பு கொள்கையின் படி, குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளை மூடுவது அல்லது அருகிலுள்ள பாடசா லைகளுடன் இணைப்பது ஒரு முக்கியப் பகுதியாகும். நாட்டில் 50க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையை கொண்ட 1,506 (15%) பாடசாலைகளும், 100க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட 3,144 பாடசாலைகளும் காணப்படுகின்றன. இந்தநிலையில் இயற்கை அனர்த்தங்களை ஒரு கருவி யாகப் பயன்படுத்தி, இவ்வாறான சிறிய பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகச் சந்தேகங்கள் எழுந்துள்ளன. லெவெண்டன், சென் ஜோர்ன்ஸ், யொக்ஸ்போர்ட், கோணக்கலை, சோப்ரா மற்றும் கம்மதுவ போன்ற பல பாடசாலைகள் இவ்வாறான ஆபத்தான மற்றும் சீர்குலைந்த சூழலில் கல்வியைத் தொடரப் போராடுகின்றன. ஊடகவியலாளர் ஒருவர் மேற்கொண்ட ஆய்வில் இந்த பாடசாலைகள் குறித்த தரவுகள் வெளிப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலைகளை மூடுவதன் ஊடாக ஏற்பட போகும் கள யதார்த்தம் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் கொள்கையின் படி, பாடசாலைகள் இணைக்கப்படும்போது மலையக மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மிகக் கடின மானவை. அரசாங்கத்தின் தரவுகளின்படி கொள்கை வகுப்பாளர்கள் ஒரு பாடசாலையை மற்றொன்றுடன் இணைக்கும்போது,  காட்டும் வரைபடத்தில் இரு இடங்க ளுக்கு இடையிலான தூரம் 1.5 கிலோமீட்டர் எனத் தெரிந்தாலும், கரடுமுரடான மலைப் பாதைகளில் மாணவர் கள் 6 கிலோமீட்டர் தூரம் வரை நடக்க வேண்டியுள்ளது.
இந்தப் பிரச்சினைகள் வெறும் கல்விப் பாதிப்புடன் நின்றுவிடுவதில்லை. இது உழைக்கும் வர்க்கமான தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக் கிறது. இந்தவிடயத்தில் பெற்றோர் மீதான தாக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதால், பெற்றோர்கள் தங்களின் அன்றாட வேலைக்குச் செல்ல முடியாமல் வருமானத்தை இழக்கின்றனர். முச்சக்கர வண்டிகள் செல்ல முடியாத பாதைகள் ஒருபுறமிருக்க, செல்லக்கூடிய இடங்களுக்கு மாதத்திற்கு சுமார் 5,000 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது.
இது தோட்டத் தொழிலாளர்களின் பொருளா தாரத்திற்கு எட்டாத ஒன்றாகும். நீண்ட தூரம் காடுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் வழியாகச் செல்வது மாணவர்களுக்கு உடல் ரீதியான சோர்வையும், குறிப்பாக பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. இதுவே மாணவர் இடைவிலகலுக்கு நேரடி காரணியாகவும் அமைகிறது.
இந்த விடயங்களை கருத்திற் கொண்டு மலையக கல்வியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் காணப்படுகின்றது. மலையகக் கல்வியைப் பாதுகாக்க பல நடவடிக்கைகள் அவசியமானவை என்று முன்மொழியப் படுகிறது. இதன்படி, பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைக் கொண்டு மீண்டும் முறையான கள ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் பாடசாலைகளைத் தூர இடங்களுக்கு மாற்றுவதை விடுத்து, அதே தோட்டப் பகுதிக்குள் பாதுகாப்பான நிலத்தை ஒதுக்கி புதிய கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும். ‘நெருக்கமான பாடசாலை’ என்பதைத் தூரத்தை வைத்து மட்டும் தீர்மானிக்காமல், நில அமைப்பு மற்றும் பயண நேரத்தைக் கருத்திற்  கொண்டு கொள்கை ரீதியாக தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பெற்றோர்களுடன் அரசாங்கம் திறந்த மனதுடன் கலந்தா லோசிக்க வேண்டும்.
தற்போதைய நிலை தொடர்ந்தால், மலை யகத்தில் கற்றல் இடைவெளி அதிகரித்து, தேசிய மட்டத்தில் மலையகப் பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பின்தள்ளப்படுவார்கள். குறிப்பாக மலையகக் கல்வியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசியல் தலைமைகளுக்கும் உண்டு. எனவே இந்த விடயத்தில் மலையக மக்களின் பிரதிநிதிகளும் கள யதார்த்தத்தை வெளிப்படுத்த வேண்டும்.
அனர்த்தங்கள் இயற்கையானவை என்றாலும், அவற்றைச் சாட்டி ஒரு சமூகத்தின் கல்வி உரிமையைப் பறிப்பது செயற்கையான அனர்த்தமாகும். மலையக மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதோடு, யதார்த்தமான தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.
கல்வி என்பது ஒரு சலுகையல்ல, அது சகல பிள்ளைகளினதும் அடிப்படை உரிமை. இயற்கை அனர்த் தங்கள் ஒரு தற்காலிக சவால்தான், ஆனால் திட்டமிடப்படாத கொள்கை முடிவுகள் ஒரு நிரந்தரப் பேரழிவாகும். மலையக மாணவர்களின் கல்விப் பாதையில் உள்ள சவால்களை அகற்ற அரசாங்கமும், சிவில் அமைப்புகளும், அரசியல் தலைமைகளும் ஒன்றிணைய வேண்டும். ‘யாவருக்கும் சமமான கல்வி’ என்பது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு மட்டும் சொந்தமானதாக இருக்கக் கூடாது. அது தேயிலைத் தோட்டத்து மலைகளுக்கும் சென்றடைய வேண்டும்.