மன்னார் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் இன்று வியாழக்கிழமை (1) மே தின நிகழ்வுகள் நடைபெற்றன.
குறிப்பாக, மன்னார் வங்காலை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடினர்.
அந்த கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்கலாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மே தினத்தை கொண்டாடியுள்ளனர்.
வங்காலை மீனவ சங்கம், மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் வங்காலை விளையாட்டுக் கழகம் கூட்டாக இணைந்து மே தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
வங்காலை கிராமத்தில் மீன்பிடித்துறையில் அமைந்துள்ள சுரூபத்தடியில் இன்று காலை மே தின நிகழ்வு திருப்பலியுடன் ஆரம்பமானது.
இதன்போது கிராம மக்கள் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு போட்டிகளில் பங்குபற்றினர்.
நீச்சல் போட்டி, பெரிய மற்றும் சிறிய படகுப் போட்டி, பெண்களுக்கான கயிறு இழுத்தல், சங்கீத கதிரை, சருக்கு மரம் ஏறல் உட்பட பல போட்டிகள் நடைபெற்றன.
வங்காலை கிராமத்தின் கடற்படையினர், பொலிஸ் தரப்பினர் உட்பட பல்வேறு பிரதிநிதிகளும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
இதேவேளை மன்னார் பேசாலை மீனவ கிராமத்திலும் மே தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
பேசாலை கடற்கரையில் அமைந்துள்ள சூசையப்பர் சிற்றாலயத்தில் மே தின சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின், கடல் ஆசீர்வதிக்கப்பட்டு மே தின நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
