மன்னார் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்த ஒருபோதும் இடமளியோம் – ரவிகரன் எம்.பி

unnamed 1 மன்னார் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்த ஒருபோதும் இடமளியோம் - ரவிகரன் எம்.பி

மன்னார் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதியோமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மக்களின் அனுமதியின்றி, மக்களின் விருப்பிற்கெதிராக மன்னாரில் அமுல்படுத்தப்படுவதற்கு முயற்சிக்கப்படுகின்ற காற்றாலைத் திட்டத்திற்கெதிராக மக்களோடு இணைந்து செயற்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார் நகரில் 04.08.2025இன்று இடம்பெற்ற காற்றாலைத் திட்டத்திற்கெதிரான எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தக் காற்றாலைத்திட்டம், கனியமணல் திட்டமென எமது மக்களுக்கு மிகமோசமான செயற்பாடுகளை முன்னைய அரசாங்கங்கள் மேற்கொண்டுவந்தன.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கமானது மக்களின் நன்மைகருதி இத்தகைய காற்றாலை மற்றும் கனியமணல் திட்டங்களுக்கு எதிராக செயற்படுவார்களென்று மக்கள் எதிர்பாத்திருக்கையில், இந்த அரசாங்கமும் இத்தகைய மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய திட்டங்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதை அவதானிக்கமுடிகின்றது.

குறிப்பாக மக்களின் அனுமதியின்றி, விருப்பின்றி இத்தகைய காற்றாலைத் திட்டங்கள் அமுல்படுத்தப்படாதென மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் உட்பட பலசந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் தற்போது மக்கள் அனுமதிக்காத, மங்கள் விரும்பாத இந்தக் காற்றாலைத் திட்டத்தை இங்கு மன்னாரில் அமுல்படுத்துவதற்கு முனைகின்றனர்.

இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அதேவேளை இவ்வாறு மக்களின் அனுமதியின்றி அத்துமீறி மன்னாரில் காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்த முயற்சிப்பதற்கு எதிராக பாராளுமன்றில் எனது கருத்துக்களைப் பதிவுசெய்வேன்.

குறிப்பாக இத்தகைய திட்டங்களின்மூலம் எமது வளங்கள் சூறையாடப்படுவதுடன், எமது இடங்களை அழிக்கின்ற செயற்பாடாகவும் இது அமைகின்றது.

இதேபோலதான் மக்களின் எதிர்ப்பையும்மீறி முல்லைத்தீவு – கொக்கிளாய் பகுதியில் கனியமணல் அகழ்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு கனியமணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக கடலரிப்பு ஏற்பட்டு கடல்நீர் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வந்த அவலநிலையே ஏற்பட்டிருந்து.

அத்தோடு கூட்டங்களிலே மக்கள் அனுமதிக்காத திட்டங்களை அமுல்படுத்தமாட்டோம் எனக் கூறிவிட்டு எந்த அடிப்படையில் இவ்வாறான திட்டங்களை இங்கு அமுல்படுத்த முனைகின்றனர்.

விடுதலைப்புலிகளின் காலத்தில் மக்கள் அனுமதிக்காத, விரும்பாத திட்டங்கள் எவையும் அனுமதிக்கப்படுவதில்லை. மக்களின் அனுமதி மற்றும் விருப்பிற்கு மாறான திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அனைவரும் பயப்படுவார்கள். விடுதலைப்புலிகளின் மேல் அனைவரும் மிகுந்தபயம் இருந்தது.

ஆனால் தற்போது மக்கள் அனுமதிக்காத திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு எமது இடங்களிலுள்ள வளங்களைச் சூறையாடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய காற்றாலைத் திட்டங்களை எமது பகுதிகளில் ஏற்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. எனவே இத்தகைய திட்டங்களுக்கெதிராக நாம் மக்களோடு இணைந்து செயற்படுவோம். இவ்வாறான அத்துமீறிய அராஜகவேலைகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோமென மிகத் தெளிவாகச் சொல்லிவைக்கவிரும்புகின்றோம் – என்றார்.