மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் இல்மனைட் கனிய வளம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (7) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பிரதிநிதிகள்,சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு உட்பட பல்வேறு தரப்பினர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
இந்த பிரச்சினைக்கு சிறந்த தீர்வை மக்களின் அபிலாஷைக்கு அமைய செயற்படுத்துவோம் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) நடைபெற்ற இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
மன்னார் மாவட்டத்தில் தற்போது காற்றாலை மின்திட்டம் மற்றும் இல்மனைட் விவகாரம் பிரதான பேசுபொருளாக காணப்பட்டு மிக மோசமான நிலைக்கு இந்த பிரச்சினை இன்று தள்ளப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை எமது அரசாங்கம் எந்த நிறுவனத்துக்கும் வழங்கவில்லை.
கடந்த கால அரசாங்கம் எவ்விதமாக திட்டமிடலும் மன்னார் மாவட்ட மக்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடாமல் காற்றாலை திட்டத்துக்கான அனுமதியை வழங்கியுள்ளது.அதறன் தொடர்ச்சியாகவே தற்போது குறித்த தரப்பினர்செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பலாபலன்களை தற்போது அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கம் முறையற்ற வகையில் கொண்டு வந்த திட்டங்களுக்கு எமது அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுவொரு துர்பாக்கிய நிலையாகும்.காற்றாலை பிரச்சினை குறித்து மன்னார் மாவட்ட மக்களுடன் கலந்துரையாடி மக்கள் சார்ந்த தீர்வினை எடுப்பதற்கு தயாராகவுள்ளோம்.
மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் இல்மனைட் கனிய வளம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.இந்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு உட்பட பல்வேறு தரப்பினர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.இந்த பிரச்சினைக்கு சிறந்த தீர்வை மக்களின் அபிலாசைக்கு அமைய செயற்படுத்துவோம் என்றார்.