மன்னார் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் காணப்படும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (28) நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தேக்கம் அணைக்கட்டிலிருந்து மேலதிகமாக வெளியேறும் நீரைப் பயன்படுத்தி 5000 பயனாளிக்கு குடிநீரை வழங்கக்கூடிய, 5.3 பில்லியன் பெறுமதியில் குடிநீர்த் திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக மன்னார் மாவட்ட செயலாளரால் விளக்கமளிக்கப்பட்டதுடன், அத்திட்டத்தை செயற்படுத்துவதற்கான முறைமையும் இதன்போது முன்மொழியப்பட்டது.
அதன்படி, மாவட்ட அபிவிருத்திக் குழுவால் இந்த குடிநீர் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக துரைராசா ரவிகரன் மேலும் கூறுகையில்,
மன்னார் மாவட்டத்தின் பல இடங்களிலும் குடிநீர் பிரச்சினை காணப்படுகிறது. மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பலத்த இடர்ப்பாடுகளை எதிர்நோக்குகின்றனர்.
குறிப்பாக ஏற்கனவே கடந்த மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், அச்சங்குளம் கிராமத்தில் குடிநீர்ப் பிரச்சினையால் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர்பில் பேசியிருந்தேன்.
அதன் விளைவாக, இந்த வருட இறுதிப் பகுதிக்குள் அச்சங்குளம் கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நறுவிலிக்குளம், முத்தரிப்புத்துறை உள்ளிட்ட பல பகுதிகளிலும் இதே குடிநீர்ப் பிரச்சினை பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர்.
எனவே, மன்னார் மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டுமென துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.
மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திட்டம் தொடர்பாகவும் ரவிகரன் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இதற்கு, அவ்வேளை, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உத்தியோகத்தர் பதிலளிக்கையில்,
மக்களுக்கான குடிநீரை வழங்குவதற்கு நீர்மூலத்தினைப் பெறுவதில் பாரிய சிக்கல் நிலை காணப்படுகிறது.
நீர்மூலங்கள் வனவள திணைக்களத்தின் பகுதிகளுக்குள் காணப்படுவதால் குடிநீர்த் திட்டங்கள் தொடர்பான செயற்றிட்டங்களை முன்னெடுக்கும்போது வனவளத் திணைக்களத்தினர் தடை ஏற்படுத்துகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை முருங்கன் பகுதியிலுள்ள கிணறுகளிலிருந்தே நீரைப் பெற்று, மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இதன் மூலம் மன்னார் மாவட்டத்தில் உள்ள 28 வீதமான மக்களுக்கு மாத்திரமே நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் குடிநீரை வழங்க முடிந்துள்ளதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உத்தியோகத்தரால் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், கீழ் மல்வத்து ஓயா திட்டம் அமுல்படுத்தப்பட்டால் மன்னார் மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்குமெனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தேக்கம் அணைக்கட்டிலிருந்து மேலதிகமாக வெளியேறும் நீரைப் பயன்படுத்தி மன்னார் மாவட்டத்தில் 5,000 பயனாளிகளுக்கு நீரை வழங்கக்கூடிய 5.3 பில்லியன் செலவில் குடிநீர்த் திட்டமொன்றை ஆரம்பிப்பது குறித்த முன்மொழிவானது மன்னார் மாவட்ட செயலாளரால் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக முன்மொழியப்பட்டது.
அத்துடன், இந்த திட்டத்துக்கு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவால் அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.